Wednesday, February 07, 2007

படுவான்கரையில் தொடரும் ஷெல் தாக்குதலால் மக்கள் இடம்பெயர்வு.!!


Wednesday, 07 February 2007

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரைப் பகுதிகளிலிருந்து மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஷெல் தாக்குதல் காரணமாகவே இடம்பெயர்வதாகக் கூறும் இவர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டுமன்றி அரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றனர்.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு மங்கிக்கட்டு, பாலக்காடு, கரடிப்பூவல், புளியடிமடு, குறிஞ்சாமுனை, ஈச்சந்தீவு, கன்னங்குடா ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாவற்காடு விளாவட்டவான், ஆயித்திய மலை ,மகிழவட்டவான், காயான்மடு, தாண்டியடி ஆகிய இடங்களிலிருந்தும் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும் போக நெற்செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.

உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 16 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக வேளாண்மை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் சுமார் ஏழாயிரம் ஏக்கரிலேயே செய்கை பண்ணப்பட்டது. இவ்வேளாண்மை அறுவடைக்கு தயாராக உள்ள போதிலும் ஷெல் தாக்குதல் காரணமாக அறுவடை செய்ய முடியாமலிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் மட்டக்களப்பு அரச அதிபரிடம் முறையிட்டுள்ளனர். ஷெல் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய முடியாது கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.