[செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007]
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது கட்சிக்கு இழுத்தெடுத்த அரச அதிபர் மகிந்த ராஜபக்ஷவை கடுமையாகச் சாடினார்.
இரு பிரதான கட்சிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு அழித்துவிட்டது என்று கூறிய ரணில், அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எந்த வாய்ப்பையும் இல்லாது செய்துவிட்டார் மகிந்த என்றும் குற்றம் சுமத்தினார்.
சிறீலங்கா சுதந்திரமடைந்த பின்னர், நாட்டின் இனப்பிரச்சனை தீர்;வுக்கு மிகவும் சாதகமான ஒரு வரலாற்றுச் சூழலை, இந்த ஒப்பந்தம் உருவாக்கியிருப்பதாக இந்தியா, யப்பான் உட்பட சர்வதேச நாடுகள் பலவும் கருத்து வெளியிட்டிருந்த வேளையில், மகிந்த ராஜபக்ஷவின் சுயநலம் கொண்ட நகர்வுகள், நாட்டின் நலனை மறைத்து விட்டன என்றார் ரணில்.
தனது இந்திய மற்றும் நேபாள பயணங்களின்போது, இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு, உலக அளவில் பலத்த வரவேற்பு இருப்பதாக கருத்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்த வாய்ப்பை மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்தத் தவறிவிட்டார்.
சிறீலங்காவின் இருளடைந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. அத்தனை இனவாதக் கட்சிகளின் ஆசீர்வாதத்துடன், நாடு தோல்வியடைந்த பட்டியலில் இணைந்துவிடப் போகிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அபாயம் எழுந்துள்ளது.
எதிரெதிர் அரசியலைத் தவிர்த்து, இணை பங்களிப்புடன் கூடிய புரிந்துணர்வு அரசியல் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்தது. அதை மகிந்த சிதறடித்து விட்டார் என்றும் ரணில் கூறினார்.
நாட்டின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரிய வாய்ப்பையும் மகிந்த அரசு இழந்துவிட்டது. கடந்த நொவம்பர் மாதத்தில், அரசின் வரவுசெலவுத் திட்டத்தை தனது கட்சி ஆதரித்ததன் மூலம், அரசைக் கவிழ்க்கும் கபட நோக்கத்தை பகிரங்கமாகத் தவிர்க்க தனது கட்சி உதவியதாகக் கூறிய ரணில், தனது கட்சி, வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால், அது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் முடிவாகவே கருதப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில், நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் இருப்பது ஏளனத்திற்குரியது என்று கூறிய ரணில், ஜனநாயகம் நலிவடைந்திருப்பதுடன், நாடாளுமன்றத்தின் பலம் தரமிறங்கியிருப்பதாகவும், அமைச்சர்கள் எண்ணிக்கை நகைப்பிற்கிடமானதாகக் காணப்படுவதாகவும் வர்ணித்தார்.
மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், கொலைகள், லஞ்ச ஊழல்கள் என்பன நாட்டில் மலிந்து போயுள்ளன. நல்லாட்சி என்பது நாட்டில் எட்டாத கனியாகி விட்டது. ஜனநாயகம் தொலைந்து, விலைவாசி உயர்வு பல மடங்கு ஏறிவிட்டது என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வை எட்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
புதினம்.கொம்.
Tuesday, February 06, 2007
ஒப்பந்தம் முடிந்தது, இருளடைந்த சகாப்தத்திற்குள் சிறீலங்கா: சொல்கிறார் ரணில்.!!
Tuesday, February 06, 2007





