Monday, February 05, 2007

காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும்.!!

[திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007]

நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சேர்ந்த விசேட படையினரின் அணிவகுப்பை முப்படைத்தளபதிகளும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் பி. ரி. பெர்னாண்டோ தலைமையில் முப்படையினரினதும், காவல்துறையினரினதும் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.

45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அணிவகுப்பின் போது சிறீலங்காவின் படைபலம் விளம்பரப்படுத்தப்பட்டது. தரைப்படையின் டாங்கிகள், துருப்புக்காவி கவசவாகனங்கள், பல்குழல் ஏவுகணை செலுத்திகள் என்பனவும். கடற்படையின் சாயுரா, சமுதுரு, சாகரா, சக்தி, உதரா, நந்திமித்ரா ஆகிய பீரங்கிக் கப்பல்களும், 6 டோராக்களும், 36 விமானப்படை விமானங்களும் அணிவகுப்பு சாகாசங்களை நிகழ்த்தியிருந்தன.

இந்தியாவினால் வழங்கப்பட்ட கரையோர ரோந்துப்படகான சாயுரா கப்பல் சிங்கக் கொடியை சுமந்து சென்றது. அணிவகுப்பில் கலந்து கொண்ட 36 விமானங்களில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 3 மிக்-27 விமானங்களும் சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தன. இந்த கொண்டாட்டங்களில் சிங்கள மக்களின் கலாச்சார நடனமான கண்டி நடனமும் இடம்பெற்றிருந்தது.

எனினும் இந்த இராணுவ விளம்பரங்களுக்கு மத்தியில் அரசின் நடவடிக்கைகளில் விசனமடைந்த பல முக்கிய அரசியல் புள்ளிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசினால் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பினால் விரக்தியடைந்த தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா, துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் மங்களா சமரவீரா ஆகியோர் உட்பட பல சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவிற்கு சமூகம்தரவில்லை.

மேலும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, ஜே.வி.பியின் தலைவர் சோமவன்சா அமரசிங்கா, பாராளுமன்றக் குழுவின் தலைவர் விமல் வீரவன்சா ஆகியோரும் விழாவில் பங்குபற்றவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்தவிற்கு ஆதரவாக ஜே.வி.பி கடுமையாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தாகவும் ஆனால் விழாவிற்கு தம்மை மகிந்த அழைக்கவில்லை எனவும் ஜே.வி.பி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.