Thursday, February 01, 2007

நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சி பயணமாகின்றார்.

சிறிலங்கா அரசைப் பொறுத்த வரை தற்போது எழுத்தில் மட்டும் நடைமுறையிலுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ஒரு தலைபட்சமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம், சமாதானப் பேச்சுக்கள் போன்றவை தொடர்பாக பிரதானமாக ஆராயப்படும் என நம்பப்படுகின்றது.

நேற்றைய தினம் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனை, கண்காணிப்புக் குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். குறிப்பாக, கண்காணிப்புக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக, அதன் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியையும் நம்பிக்கையையும் உறுதி செய்த விடுதலைப் புலிகள், நோர்வே தூதுவரிடமும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு விதியையும் சிறிலங்கா அரசு மதித்து நடக்காத நிலையில், வலிந்த தாக்குதல்கள் மூலம் ஆக்கிரமிப்புக்களும் தொடர்கின்றன.

இந்நிலையில், நோர்வே தூதுவரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.