Monday, February 05, 2007

கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.: தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. தண்ணீர்- காவிரி நடுவர் மன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

[Monday February 05 2007 ]

தமிழ்நாடு- கர்நாடகம் இடையே காவிரி நதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் பல்லாண்டு காலமாக பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

காவிரி நதிநீர் பிரச் சினைக்கு தீர்வு காண 1990-ம் ஆண்டு நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 1991-ல் அறிவித்த இடைக்கால தீர்ப்பில், "கர்நாடகம் ஒவ் வொரு ஆண்டும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கூறியது.

இதை கர்நாடகம் ஏற்க வில்லை. இதற்கிடையே நடுவர் மன்றம் காவிரி பாசனப் பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்தியது. தமிழ்நாடு, கர் நாடகாவில் எவ்வளவு ஏக்கர் சாகுபடி பரபரப்பளவு உள்ளது. அவற்றுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று ஆராய்ந்தது.

காவிரியில் ஓராண்டுக்கு சராசரியாக 740 டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தமிழ் நாட்டுக்கு 395 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 250 டிஎம்சி, கேரளாவுக்கு 33.40 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் தேவை என்று நடுவர் மன்றம் மதிப்பீடு செய்துள்ளது.

நடுவர் மன்றம் தொடங்கப் பட்டு 17 ஆண்டுகள் கழித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை இறுதி அறிக்கையாக நடுவர் மன்றத்தினர் தயாரித்து தாக்கல் செய்தனர்.

550 நாட்கள் நடுவர் மன்றம் நடத்திய விசாரணை தகவல்கள் பெரிய அளவில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை இன்று (திங்கட் கிழமை) இறுதி தீர்ப்பாக வெளியிடப் போவதாக நடுவர் மன்றம் அறிவித்தது. இதனால் கர்நாடகாவில் பதட்டம் ஏற்பட்டது.

தமிழக மக்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று காலை முதலே ஆவலுடன் எதிர்பார்த்தனர். மதியம் 2 மணிக்கு நடுவர் மன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 419 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

கர்நாடகம் தன் பங்காக ஒவ்வொரு ஆண்டும் 270 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்துக்கு 7 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகள் அப்பீல் செய்யலாம்.

இவ்வாறு நடுவர் மன்றம் இன்று இறுதி தீர்ப்பை வெளியிட்டது.

நடுவர் மன்றம் தன் இடைக் கால தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை கொடுக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது இறுதி தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி தண்ணீர் கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு வழக்கத்தைவிட 2 மடங்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள் ளது.

இது கர்நாடக விவசாயி களிடம் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

காவிரியில் ஆண்டுதோறும் 740 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. இதை 4 மாநிலங்களும் எவ்வாறு பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்றம் இன்று தீர்ப்பு மூலம் உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

தமிழ்நாடு- 419 டி.எம்.சி.

கர்நாடகா- 270 டி.எம்.சி.

கேரளா- 30 டி.எம்.சி.

புதுச்சேரி- 7 டி.எம்.சி.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -10 டி.எம்.சி.

லீக்கேஜ்- 4 டி.எம்.சி.

மொத்தம்- 740 டி.எம்.சி.

கர்நாடகத்தின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. காவிரியின் மொத்த நீளம் 802 கி.மீ. இதில் கர்நாடகத்தில் 381 கி.மீ. தமிழ்நாட்டில் 351 கி.மீ. நீளத்துக்கு காவிரி ஆறு ஓடுகிறது.

காவிரி தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாக கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு- கர்நாடகா இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீர் பகிர்வுக்காக 1924-ம் ஆண்டு தமிழ்நாடு -கர்நாடகா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக 1974-ம் ஆண்டு கர்நாடகம் அறிவித்தது.

இதனால் காவிரி நதி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்தது. இரு மாநில அரசு அதிகாரிகள் பல தடவை சந்தித்து பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதற்கிடையே விதிகளை மீறி கர்நாடகம் காவிரியில் புதிய அணைகளை கட்டியது. அதோடு தனது பாசனப் பகுதிகளையும் அதிகரித்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதி விவசாயிகள் வாடி வதங்கினார்கள். போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர் சாகுபடியில் வீழ்ச்சி ஏற்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த தஞ்சை விவசாயிகள் 1986-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தமிழக அரசு அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொண்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் நடந்த பேச்சுவார்ததைகளிலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து 1990-ம் ஆண்டு ஜுன் மாதம் 2-ந்தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இந்த நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கொடுத்த பிறகே கர்நாடகம் தன் அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பை கர்நாடகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் அடுத்த மாதமே (ஜுலை) சட்டசபையை கூட்டி நடுவர் மன்ற உத்தரவை நிராகரிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தது. மத்திய அரசிடமும் மனு கொடுத்தது.

கர்நாடகத்தின் இந்த போக்குக்கு அதிருப்தி தெரிவித்த மத்திய அரசு, நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை 1991-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி கெஜட்டில் வெளியிட்டது. இதை எதிர்த்து அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பா "பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். 10 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டன.

1991-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழர்கள் அகதிகள் போல வெளியேறினார்கள்.

இந்த கொடூரத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டையும், தமிழக விவசாயிகளையும் கர்நாடகம் தொடர்ந்து வஞ்சித்தது. குறிப்பிட்ட அளவு தண்ணீரை விடவில்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்த போதும், தமிழர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.

2002-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை மீண்டும் கிளம்பியது. சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் உத்தரவிட்டதால் அப்போதைய எஸ்.எம். கிருஷ்ணா அரசு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கர்நாடக அணைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து யார்- யாருக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை கண்டுபிடிக்க நடுவர் மன்றம் விசாரணை நடத்தியது.

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்த நடுவர் மன்ற குழுவினர் மொத்தம் 550 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தமிழகம் 566 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளா 994 டி.எம்.சி., புதுச்சேரி 9 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று கேட்டன.

இதையடுத்து 4 மாநிலங்களுக்கும் சென்ற நிபுணர்கள், காவிரி பாசனம் மூலம் சாகுபடி நடக்கும் பரப்பளவை கணக்கெடுத்தனர். அதன் அடிப்படையில் தண்ணீர் தேவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் காவிரி பாசன சாகுபடி 24.70 லட்சம் ஏக்கர் பரப்பளவு இருப்பதாகவும், இதற்கு 395 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 18.85 லட்சம் ஏக்கர் பரபரப்பளவு உள்ளது என்றும் இதற்கு 250 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்றும் மதிப்பிட்டுள் ளார்கள்.

கேரளாவுக்கு 33.40 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காவிரியில் சராசரியாக ஓராண்டுக்கு 740 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. இதை மேற்கண்ட முறையில்தான் பங்கீட்டுக் கொள்ள முடியும் என்று நடுவர் மன்றம் இறுதி முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய தீர்ப்பும் இந்த முடிவை பிரதிபலித்துள்ளது.