Tuesday, January 16, 2007

நிபந்தனைகளுடன் அரசாங்கத்தில் இணைகிறது முஸ்லிம்...

நிபந்தனைகளுடன் அரசாங்கத்தில் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் நிபந்தனையுடன் இணைவது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்பீடச் சந்திப்பின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. சுமார் ஆறு மணித்தியாலம் நீடித்த இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையா விட்டாலும், தான் இணையப்போவதாக பகிரங்கமாக அறிவித்த பாயிஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார். இங்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதற்கு முன்னர் 4 பிரதான விடயங்களை உள்ளடக்கிய நிபந்தனைகளை முன்வைத்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதெனவும், இது தொடர்பாக அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு இணைந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றால் அதில் முஸ்லிம்களுக்குத் தனித்தரப்பு, உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம், முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட இடங்களில் அரசியல் அதிகாரம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வகிக்கும் கல்முனையை மையமாகக் கொண்டு தனிக் கரையோர மாவட்டம் உட்பட முஸ்லிம் காங்கிரசின் நிபந்தனைகள் குறித்து அரசுடன் பேசுவது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பேச்சுவார்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கீகரிப்பதற்கான இறதி அதிகாரம் கட்சியின் தலைவர் என்ற வகையில் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளையில், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் அரசுடன் இணைவதற்கு முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் அது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரங்கள் குறித்து பேசி, முடிவெடுப்பதற்காக அரச தலைவர் மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.