Tuesday, January 16, 2007

சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!?

சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!? [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007] சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் நாள் முழுமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையத் தயாராகியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியில் அதிருப்தியடைந்துள்ள சிலருடன் இணைந்து மீள் அரசியல் பிரவேசத்துக்கு சந்திரிகா குமாரதுங்க தயாராகி வருவதாகவும், அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜய குமாரதுங்கவின் நினைவு நாள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அன்றைய நாளிலேயே முழுமையான அரசியலில் ஈடுபடும் அறிவிப்பை சந்திரிகா குமாரதுங்க வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவியைப் பயன்படுத்தி தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்டிருக்கின்றார். தன்னுடைய மீள் அரசியல் பிரவேசம் தொடர்பாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருடன் அத்தனகலையிலுள்ள ஹொரகொல்ல வளவில் சந்திரிகா குமாரதுங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கின்றார். இதில், அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க, பிரதி அமைச்சர்களான திலான் பெரேரா, லசந்த அழகியவன்ன, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிய வந்திருக்கின்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி மூலமாக நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகளை சந்திரிகா மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவும் சாத்தியமாகாது போனால், மறைந்த விஜயகுமாரதுங்காவினால் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் மீள் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு சந்திரிகா குமாரதுங்க திட்டமிட்டிருக்கின்றார். சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக்கொண்டுள்ள அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர மற்றும் திலான் பெரேரா ஆகியோரும் சந்திரிகாவின் மீள்பிரவேசத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகின்றது.