வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான அரசின் தீர்வுத் திட்டம் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் இத்தாலி பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் அமைச்சர் நிமால் தெரிவிப்பு [Saturday January 13 2007] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.அரசாங்கத்தின் தீர்வு திட்டம் நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களின்ஆதரவுடனேயே முன்வைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று சுகாதார துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இத்தாலி பிரதிவெளிவிவகார அமைச்சர் கியானி வேனட்டி சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இத்தாலிய அமைச்சருக்கு தெளிவு படுத்தினார் . அரசாங்கத்திற்கும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது அத்துடன் அரசாங்கத்தினால்முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்குவதற்கும் முன்வந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது.இவ்வாறன நிலையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.





