Friday, January 12, 2007

வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. ...

வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. கடுமையாக அரசை எச்சரிக்கின்றது அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிட்டால், அரசாங்கம் பெரும் அவலமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான விமல் வீரவன்ச இவ்வாறு ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது: அண்மையில் நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகளின் குழுக்கூட்டத்தில் அரசின் அமைச்சர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கென கூறி தீர்வு யோசனை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். 'இரகசியமானது' என்ற குறிப்புடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்தத் தீர்வை அடிப்படையாகக் கொண்டு தங்களது முடிவை தயாரிக்கும் பணியில் சர்வகட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஈடுபட்டுள்ளது. திஸ்ஸ விதாரன என்பவர் அரசின் அமைச்சராவார். இதனடிப்படையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அவர் அரசாங்கப் பிரதிநிதியாகவே அங்கம் வகித்துள்ளார். இக்குழுவின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வசதிக்காவே குழுவினால் அதன் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதற்கமைய அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தீர்வானது அரசாங்கத்தின் தீர்வாகவே கருதப்படும். அமைச்சர் திஸ்ஸ விதாரன மூலம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்தத் தீர்வு யோசனையானது மிகவும் பயங்கரமானது. இது எந்தவொரு இறுதித் தீர்வையும் தயாரிக்கும் போது அடிப்படையாகக் கொள்ளக்கூடாததாகவே நாம் கருதுகின்றோம். இந்த யோசனையின் பெரும்பாலான விடயங்கள் அண்மையில் நிபுணர்கள் குழுவின் 'ஏ' அணியின் இனவாத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தச் சமர்ப்பித்த தீர்வு யோசனைக்குச் சமமானதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இலங்கை ஒற்றையாட்சியுடையதா இல்லையா என்பதை இதில் எங்கும் குறிப்பிடவில்லை. அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், 'சமஷ்டி' என்னும் இனவாத அடிப்படையிலான அரசியல் அதிகாரப் பகிர்வு யோசனையை உள்ளடக்கமாகக் கொண்டதாகவே உள்ளது. இதேவேளை, பொதுவாக எடுத்துக்கொண்டால், திஸ்ஸ விதாரனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்வு யோசனை மூலம் மத்திய அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரம் இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நில அதிகாரங்களும் முழுமையாக மாகாண அரசாங்கக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த அரசாங்கமானது 2005 ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் புறக்கணித்து இந்தப் பிரிவினைவாத தீர்வொன்றைப் புறக்கணித்து இந்தப் பிரிவினைவாததத் தீர்வொன்றை ஏற்படுத்த முயற்சித்து அவல சூழ்நிலைக்கு ஆளாகாமல் சரியான வழியைத் தேர்ந்தெடுக்கும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்தார்.