Saturday, January 13, 2007

காலி, பூஸா தடுப்பு முகாம் மீண்டும் செயற்பட ...

காலி, பூஸா தடுப்பு முகாம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [Saturday January 13 2007 ] பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்திய பின்னர், பெரும் எண்ணிக்கையானோர் சந்தேகத்தின் பேரில் தினமும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களைத் தடுத்து வைப்பதில் கொழும்பு சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளமை காரணமாகவே பூஸா தடுப்பு முகாமை இயக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரியன்ஸி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 60 பேர் பூஸா தடைமுகாமுக்கு அனுப்பப்படவுள்ளனர் எனவும் ரியன்ஸி பெரேரா மேலும் தெரிவித்தார். பூஸா தடைமுகாம் 1971 1981 ஆண்டு காலப்பகுதிகளில் ஜே.வி.பி. சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கப்பயன்படுத்தப்பட்டது. பின்னர் விடுதலைப் புலி சந்தேக நபர்களும் அங்கு தடுத்துவைக்கப்பட்டனர். 1987 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் தலைமையின் கீழ் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையின்போது, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பூஸா முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். மற்றும் பல தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என மனித உரிமை அமைப்புகள் பலவும் குற்றம்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.