வாகரை நோக்கிய இறுதித் தாக்குதலுக்கு தயாராகும் இராணுவம்
[வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007]
மட்டக்களப்பு வாகரையை கைப்பற்றும் இறுதித் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவம் இவ்வாரத்தின் இறுதிப்பகுதியில் தயாராகி வருகின்றது.
இத்தாக்குதல் முயற்சியின் முன்னோடியாக வாகரைப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளை சரணடைய இராணுவம் கோரியுள்ளதுடன் அங்கிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாகரைப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கான இறுதி எச்சரிக்கை இது. அவர்களுக்கு சரணடைவதை தவிர வேறு வழிகள் இருக்கப்போவதில்லை. சரணடையாது விட்டால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது படையினர் வாகரை பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளனர். பனிச்சங்கேணி பாலத்தை கைப்பற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் காயமடைந்த தமது போராளிகளை பராமரிப்பதற்கு வாகரை மருத்துவமனையை அத்துமீறி பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
வாகரை நிலைமை தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இருதரப்பினரும் வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பிலும், வாகரை மருத்துவமனையின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தவேண்டும். வாகரை மருத்துவமனை பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கியுள்ளனர். அங்கு மோதல்கள் இடம்பெறுவது மற்றும் அப்பகுதியை நோக்கி எறிகணைகள் ஏவப்படுவது தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.
அனைத்துலக மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மருத்துவமனையும் அதன் ஊழியர்களும் மக்களின் மருத்துவ சேவைகளுக்கு அவசியமானவை. எனவே அவர்களை மதிப்பதுடன் எந்த வேளையிலும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மருத்துவமனையை தாக்குதலுக்கோ அல்லது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கோ பயன்படுத்தாதவரை அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. மருத்துவமனையிலோ அல்லது அதனை அண்டிய பகுதியிலோ அடைக்கலம் தேடும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகரையில் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஒரு உதவி நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தகவல் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதாபிமான அமைப்புக்கள் வாகரைப் பகுதிக்கு செல்வதற்கு தொடர்ந்து தடைவிதித்து வருகின்றது. அங்குள்ள மக்களின் தற்போதைய நிலை மிகவும் மோசமானது. அங்கு உணவுக்கையிருப்பு தீர்ந்து விட்டது. உணவு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு வருவதற்கும் அரசு தடைவிதித்துள்ளது. இடம் பெயர்ந்த 15,000 மக்களும் பட்டினிச்சாவின் விளிம்பில் உள்ளனர்.
இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் உடுத்த உடைகளுடன் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் வெளியேறியவர்கள். உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாகரைக்கு எடுத்துச் செல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளதுடன் குறிப்பிட்ட சில வாகனங்களை மட்டுமே அனுமதிக்கின்றது. கிடைக்கும் இந்த உணவுப் பொருட்கள் மக்களின் தேவைகளுடன் ஒப்பிடும் போது 60 விகிதமாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் தான் இறுதியாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய வாகனத்தொடரணி அனுமதிக்கப்பட்டது. எனினும் அன்று இரு வாரங்களுக்கு போதுமான உணவுப்பபொருட்களே அனுப்பப்பட்டன.
அதேவேளை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவிக்கையில்,
எமது அரைப்பங்கு உறுப்பினர்களை மட்டக்களப்பு உட்பட அதிகளவில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுப்பவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கொழும்பில் கலந்துரையாடல் செயலமர்வில் உள்ள உறுப்பினர்கள் விரைவில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். கண்காணிப்புக்குழுவின் இரு உறுப்பினர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வார இறுதியில் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய பகுதிகளுக்கும் உறுப்பினர்கள் திரும்ப உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பணியில் இல்லாத சமயத்திலேயே கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Friday, January 19, 2007
வாகரை நோக்கிய இறுதித் தாக்குதலுக்கு தயாராகும் இராணுவம்
Friday, January 19, 2007





