Friday, January 19, 2007

அகதிகளுக்கு உதவுவதற்கு 66 மில்லியன் டொலர் தேவை:

அகதிகளுக்கு உதவுவதற்கு 66 மில்லியன் டொலர் தேவை: ஐ.நா. அவசர கோரிக்கை [வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007] தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள், மோதல்களினால் புதிதாக 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் அகதிகளாகியிருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் உதவுவதற்காக 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மோதல்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 2006 ஏப்ரலின் பின்னர் மீண்டும் வெடித்த வன்செயல்களும், மோதல்களும் மனிதாபிமான ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முகவர் அமைப்புக்களும் இலங்கையில் செயற்படும் இந்த அமைப்புக்களின் பங்காளிகளும், பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டத்தை உதவி வழங்கும் சமூகத்துக்குச் சமர்ப்பித்துள்ளனர். அடுத்த 6-12 மாதங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு 66 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 24 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தினாலும், அதற்கு முன்னர் போரினாலும், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 2006 ஏப்ரலின் பின்னரான வன்முறைகள், மோதல்களினால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் மனிதாபிமான நிலவரம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் புதிதாக அகதிகளாகியுள்ளார்கள். நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். ஏற்கனவே மோதல்களினால் இடம்பெயர்ந்திருக்கும் 3 லட்சத்து 19 ஆயிரம் பேருடன் ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் தொகையையும் சேர்த்து தற்போது 5 லட்சம் பேர் நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் உள்ளனர். பாதுகாப்பு நிலைமைகளால் அண்மைக் காலங்களில் யாழ். குடாநாட்டுக்கு தரை, கடல் வழியான போக்குவரத்து பொருட்களைக் கொண்டு செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில், அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மிக மோசமான நிலைமையில் உள்ளனர். இலங்கையிலுள்ள முகவர் அமைப்புக்களுக்கிடையிலான நிலையியல் குழு, உதவி வழங்குவோர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு உட்பட சர்வதேச சமூகம் என்பன நிவாரண, விநியோகம், மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்காக கிரமமான முறையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. கடல் மார்க்கமான விநியோகத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக ஈடுபட்டிருப்பதுடன், உள்ளுர் பங்கீட்டு நடவடிக்கைகளையும் சீர்படுத்தி வருகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.