Thursday, January 18, 2007

விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்தார்கள் என்ற.....

விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறார்கள் கைது 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை, அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதியில் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுவந்துள்ள சிறிலங்கா அரசு, அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்ததாகவும், தாம் காப்பாற்றி விட்டதாகவும் ஊடகங்களிடம் பொய்த் தகவல் பரப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து இவர்களைக் காப்பாற்றினோம் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சிறார்களிடம் நிருபர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டபோது, தாம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவும் இல்லை, அவர்கள் எம்மைக் கடத்தவும் இல்லை, நாம் வீடு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைப்புறங்களில் வாழும் ஐந்து ஏழைக் குடும்பத்தினரின் சிறார்கள், தங்கள் பெற்றோருக்கும் சகோதரருக்கும் உணவு தேடிச் சென்றபோது, படையினரால் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் கடத்தியதாகச் சொன்னால் விடுவிப்போம் என்று அவர்களை அரச படையினர் மிரட்டியதுடன், துணை இராணுவக்குழுவினரின் மிரட்டலும் விடுக்கப்பட்டது. அவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டிய துணை இராணுவக்குழுவினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, படையினர் கூறியபடி அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், நிருபர்கள் கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கு, அந்த சிறார்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால், அவ்வப்போது, தமக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்றும், தாம் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் என்றும் தெரிவித்தனர். இவர்களை சிறார் புனர்வாழ்வு முகாமில் விடப்போவதாக கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.