Wednesday, January 17, 2007

'அரசுடன் இணையும் எண்ணம் யாருக்கும் இல்லை'

அரசுடன் இணையும் எண்ணம் யாருக்கும் இல்லை': சுரேஸ் பிரேமச்சந்திரன் [புதன்கிழமை, 17 சனவரி 2007, 08:49 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார். இவ்வாறான தகவல்கள் எதனையும் தான் அறியவில்லை எனவும் 'புதினம்' இணையத்தளத்துக்குத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், "இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி, பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவினால் அவிழ்த்து விடப்பட்டுள்ள மற்றொரு கட்டுக்கதையே தவிர வேறொன்றுமல்ல" எனவும் தெரிவித்தார். கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையலாம் என அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்திருப்பது தொடர்பாக பி.பி.சி.யின் சிங்கள சேவை உட்பட பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அது தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் அரசாங்கத்துடன் இணையவுள்ளார்கள் எனவும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுப் பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்பு கொண்ட போது அவர் அதனைத் திட்டவட்டமாக மறுத்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கருணா குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்கள். அதனைவிட வேறு எதுவும் இடம்பெறவில்லை" எனவும் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். தொடர்புபட்ட செய்தி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் அரசில் இணைய ஆர்வம்: கேகலிய ரம்புக்வெல புதினம்.கொம்.