Wednesday, January 17, 2007

வவுனியாவில் 6 பொதுமக்கள் படுகொலை- இருவர் கடத்தல்

வவுனியாவில் 6 பொதுமக்கள் படுகொலை- இருவர் கடத்தல் [புதன்கிழமை, 17 சனவரி 2007] வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் அரச சார்பற்ற நிறுவன ஓட்டுநர், பெண் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் கடத்தப்பட்டுள்ளனர். வவுனியா நகரிலிருந்து மேற்குப் பகுதியில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள குருமண்காட்டில் ஒரே வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை சம்பவமானது வவுனியா சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ளது. முச்சக்கர வாகனத்தில் அரிசி ஆலை வீதியில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் முச்சக்கர வாகனத்திலேயே எரித்துக் கொல்லப்பட்டார். குருமண்காடு பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் மெடிசினிஸ் சான்ஸ் புரொன்டைர்ஸ் (MSF) எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஓட்டுநரான றொகான் இராஜதுரை (வயது 44), அன்ரன் ரூபசீலன் (வயது 26), அந்தோணிப்பிள்ளை பொன்மணி (வயது 57), யோகநாதன் ஜெயந்தன் (வயது 28) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஜஸ்மின் சிவகுமார் (வயது 25) என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். அரிசி ஆலைப் பகுதியில் இரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில் பெருமாள் சந்திரசேகரன் (வயது 25), தராதரன் ரமேஸ் (வயது 30) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் வவுனியா அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்கண்டு ஜெயராஜன் (வயது 30), தனுஸ்கோடி சிவகாந்தன் (வயது 26) ஆகியோர் முச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மகாரம்பைகுளம் பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக கடத்தப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் 2 உந்துருளிகளிலும் ஒரு முச்சக்கர வாகனத்திலும் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.