ஆரையம்பதியிலிருந்து துணை இராணுவக்குழுவினர் இடமாற்றம்
[புதன்கிழமை, 17 சனவரி 2007]
மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் மக்களுக்கும் சிறிலங்கா இராணுவ துணை இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து தமது பிரதேசத்தின் ஊடாக ஆயுதங்களுடன் கருணா குழுவினர் செல்வதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினை அடுத்து உருவான பதற்றத்தை தணிக்கும் முகமாக இராணுவத்தின் 23-3 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் சுபசிங்காவினால் அரையம்பதியில் உள்ள கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அவரது குழுவினரும் வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக வரவழைக்கப்பட்ட உறுப்பினர்கள் அரையம்பதி சிறப்பு அதிரடிப்படைருடன் முகாம் அமைத்துள்ளதாக காத்தான்குடி முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி நகர சபைத்தலைவர் யூ.ஜே.எம்.முபீன் தலைமையில் பள்ளிவாசல்கள் சமேளனத்தின் உறுப்பினர்கள், உலாமாக்கள் சபை உறுப்பினர்கள் ஆகியோர் இராணுவத்தளபதியையும், சிவில் நிர்வாக இணைப்பதிகாரியான மேஜர் பெற்றி பெரேராவையும் பிரிக்கேட் தலைமையகத்தில் கடந்த சனிக்கழமை சந்தித்து 3 மணி நேரம் கலந்துரையாடினர்.
அதற்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரான எஸ்.அருமைநாயகத்தை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள், காத்தான்குடி, ஆரையம்பதி எல்லைப்பகுதியில் வாகரையிலிருந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்களை தற்காலிகமாக குடியேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் குடியேற்றியுள்ள பகுதியில் உள்ள காணிகள் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானவை எனவும். 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரீட் மீரா லெப்பையினால் ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தனர்.
எனினும் இது தொடர்பான முடிவை ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய நிர்வாகமும், பள்ளிவாசல்களின் சம்மேளனமும் எடுப்பார்கள் என இறுதியில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கருணா குழுவும் பங்குபற்றியிருந்தது.
தமது பிரதேசத்தின் ஊடாக கருணா குழுவினர், ஆயுதங்களுடன் செல்லும் போது, விடுதலைப் புலிகள் அவர்களை தாக்கினால் அது முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தாக்கியதாக தவறாக அர்த்தம் கொள்ளப்படுவதுடன் மோதலுக்கும் வழிவகுக்கும் என முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவரின் தலையற்ற உடல் 5 கி.மீ தொலைவில் உள்ள காத்தான்குடியில் போடப்பட்டது அங்கு மீண்டும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது.
Wednesday, January 17, 2007
ஆரையம்பதியிலிருந்து துணை இராணுவக்குழுவினர் இடமாற்றம்
Wednesday, January 17, 2007





