Tuesday, January 16, 2007

வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு

(2 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் படை நகர்வு [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007] மட்டக்களப்பு வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் இன்று மும்முனைகளில் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். திருகோணமலை மூதூர் கிழக்கு உப்பூறலில் இருந்து இலங்கைத்துறை முகத்துவாரம் வழியாக ஒரு முனையிலும் மாங்கேணியிலிருந்து பனிச்சங்கேணி நோக்கியும் மும்முனைகளில் படையினர் ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டனர். செறிவான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களுடன் படையினர் நகர்வு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணி தொடக்கம் படையினரால் கஜூவத்தை மற்றும் கல்லாறு படை முகாம்களில் இருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் மிகச்செறிவாக நடத்தப்படுகின்றன. சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானத் தாக்குதல்களும் அதிகளவில் நடத்தப்பட்டன. இந்த செறிவான சூட்டாதரவுடன் மாங்கேணியிலிருந்து பனிச்சங்கேணி நோக்கி ஆக்கிரமிப்பு நோக்கில் படையினர் படை நகர்வை மேற்கொண்டனர். முற்பகல் 8.45 மணியளவிலும் பிற்பகல் 1.50 மணியளவிலும் கதிரவெளி மற்றும் பால்சேனை பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. மூதூர் கிழக்கு வழியிலும் மாங்கேணி, பனிச்சங்கேணி வழியிலும் இந்த ஆக்கிரமிப்பு நகர்வை படையினர் மேற்கொண்டனர். மதியத்துடன் தாக்குதல்கள் ஓய்ந்த நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்த்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 7 போராளிகள் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இராணுவத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் கப்டன் மற்றும் லெப்ரினன்ட் தரத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்த நிலையில் பொலநறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.