யாழ். செல்லவிருந்த கப்பலில் விமான உதிரிப்பாகங்கள்: குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை
[செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007]
யாழ். குடாநாடு நோக்கிச் சென்ற கப்பலில் விமான உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முடியும் வரை கப்பலை நகர்த்த வேண்டாம் என சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை கப்பலின் உரிமையாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அத்தியாவசிய சேவைகள் ஆணையகத்தின் ஆணையாளரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ்பாணம் செல்லவிருந்த வேளை தடுத்து நிறுத்தப்பட்டது.
எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைகளை குழப்புவதாகவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பலின் கப்டனை கப்பலை நகர்த்துமாறு பணிப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் டேர்பனிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த கப்பல் கடந்த வாரம் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்படடிருந்தது. அதில் உள்ள பணியாளர்களில் பெரும்பான்மையானோர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஒருவர் தமிழராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விமான உதிரிப்பாகங்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டனவா என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த உதிரிப்பாகங்களை பார்வையிட்ட விமானப்படை அதிகாரிகள் அவை விமானத்தின் நிலைக்குத்தான இறக்கைப்பகுதி என தெரிவித்தனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரிடமிருந்து 36 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கப்பலை வாங்கினேன். முன்னாள் கப்டன் பொழுது போக்கிற்காக விமான உதிரிப்பாகங்களை சேகரிப்பவர். எனவே தவறுதலாக இந்த பாகங்களை கப்பலில் விடப்பட்டிருக்கலாம் என மகேஸ்வரன் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியும், கெல உறுமயவும் மகேஸ்வரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அரசை கேட்டுள்ளன.
அரசு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மட்டும் நடவடிக்கை எடுக்காது அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க வேண்டும் என கெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கப்பலின் உரிமையாளர் அரச தரப்போ அல்லது எதிர்த்தரப்போ அல்லது கட்சி தாவுகிறவரோ யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜே.வி.பி யின் நாடாளுமன்ற குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
Tuesday, January 16, 2007
யாழ். செல்லவிருந்த கப்பலில் விமான உதிரிப்பாகங்கள்:
Tuesday, January 16, 2007





