Monday, January 15, 2007

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவினரின் வன்முறைகள்:

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவினரின் வன்முறைகள்: சிறிலங்கா காவல்துறையினரின் நிர்வாகம் சீர்குலைவு மட்டக்களப்பின் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆயுதங்களுடன் வலம் வருவதாகவும் பொதுமக்களை மிரட்டுவதுடன் அவர்களின் பிரச்சினைகளை காவல்துறையினரிடம் முறையிடாது தமது அலுவலகங்களில் வந்து முறையிடுமாறு கட்டளையிட்டுள்ளதுடன் அங்கு பொது நிர்வாகத்தையும் சீர்குலைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கருணா குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் படி நடந்து கொண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுமக்களை தமது பிரச்சனைகளை முறையிடுவதற்கு கருணா குழுவினரின் காரியாலயத்திற்கு வரும்படி அழைப்பதை நாம் அனுமதிக்க முடியாது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை, கடந்த பல வாரங்களாக மட்டக்களப்பு மருத்துவமனைக்குச் செல்லும் கருணா குழுவினர், இராணுவத்தினரின் முன்னிலையில் அங்குள்ள பொதுமக்களை பயமுறுத்துவதுடன், வரிகளும் அறவிட்டுள்ளனர். காத்தான்குடியில் உள்ள முஸ்லிம் பொதுமக்கள் கடந்த சனிக்கிழமை மட்டும் கருணா குழுவினருக்கு எதிராக 18 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். அதில் தாக்குதல், கொலை முயற்சி, காவல்துறையினருக்கு எதிரான அச்சுறுத்தல், சேதம் விளைவித்தல் என்பன அடங்கும். தினக்குரல், சுடரொளி பத்திரிகைகள் மட்டக்களப்பில் கருணா குழுவினரால் தடை செய்யப்படுள்ள நிலையில், கடந்த வாரம் திருமலையிலும் இந்த பத்திரிகைகள் மீதான தடையை கருணா குழுவினர் அமுல்படுத்தியுள்ளனர். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமனே, கருணாவுக்காக சிறப்பாக எதுவுமில்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்ட கருணா குழுவினரை காவல்துறையினர் கைது செய்தபோது, விடுதலைப் புலிகளுடன் போரிட கருணா குழுவினரின் உதவிகள் தேவைப்படும் எனக்கூறி, கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அழுத்தத்தால் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமலே விடுவிக்கப்பட்டு வருகின்றனர். புதினம்.கொம்.