பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
[14 - January - 2007]
பயங்கரவாதத்தை அடியோடு கிள்ளி எறிந்து முழு நாட்டிலும் ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தும் நிலைப்பாட்டிலிருந்து தாம் சிறிதளவும் பின் வாங்கப்போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
வைத்தியத்துறைக்கு 1200 பேரை சேர்த்துக் கொள்ளும் வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இராணுவ, பொலிஸ் படைகளில் சேவைபுரிவோர் உட்பட பலருக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது;
நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்படவும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இவற்றைச் செய்யும் அதேசமயம் ஆரோக்கியமான சமுதாயமொன்றைக் காண்பதும் எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு எனது அரசு கடப்பாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சமாதானத்துக்காக பாடுபடும் அதேசமயம், நாட்டின் அபிவிருத்தியையும் கவனத்தில் கொண்டுள்ளோம். அபிவிருத்தித்திட்டம் ஒரு பிரதேசத்துக்கு மட்டுப்படுத்தப்படாமல் முழுநாட்டையும் உள்ளடக்கியதாகவே நோக்குகின்றோம்.
தேசத்தின் முன்னேற்றத்துக்கு பயங்கரவாதம் பெரும் தடையாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுநாட்டிலும் ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தும் பெரும் சவாலை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். எத்தகைய நெருக்கடிகள் வந்தபோதிலும் நாம் பின்வாங்கப்போவதில்லை.
சமாதானத்துக்கும், அபிவிருத்திக்கும் அடுத்தபடியாக சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டிருக்கின்றோம். இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்கும் பொருட்டே போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியையும் முன்னெடுத்து வருகின்றோம். சட்டத்தை பிரயோகித்தாவது இதனை சாதிக்க வேண்டிய நிலை எமக்கு உருவாகியுள்ளது.
ஆரோக்கியமுள்ள சமுதாயமொன்றில்லாமல் நாடும் மக்களும் முன்னேற்றம் காண முடியாது. ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. சுகாதாரத்துறை என்பது ஒரு புனிதமான துறையாகும். அதில் உள்வாங்கப்பட்டிருக்கும் நீங்கள் கடப்பாட்டுடனும், கடமை உணர்ச்சியுடனும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.
இந்த வைபவத்தில் சுகாதார நலன், போஷணை ஊவ வெல்லஸ்ஸ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் சுகாதார அமைச்சு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Sunday, January 14, 2007
பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்க எந்தவொரு ..
Sunday, January 14, 2007





