Wednesday, January 10, 2007

தமிழ் - முஸ்லிம் நல்லுறவை துணை இராணுவக்குழுவினர் ..

தமிழ் - முஸ்லிம் நல்லுறவை துணை இராணுவக்குழுவினர் சீரழிக்கின்றனர்: ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் சீரழித்து வருவதாகவும் அரசு அவர்களை கட்டப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: கருணா குழுவினரது செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றது. அந்த குழுவினர் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். வாகரையிலிருந்து வெளியெறிய முஸ்லிம் மக்கள் அரம்படே பகுதியில் மீளகுடியமர்ந்த போது அந்தப் பகுதி முகாம்களில் உள்ள படையினர் மற்றும் கருணா குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி உள்ளனர். கிழக்கில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. கிழக்கில் உள்ள சில முஸ்லிம் வர்த்தகர்கள் சந்தைக்கு சென்று வியாபாரம் செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் அரச படையினர் மோதும் போது அவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டனரே தவிர வேறு தொழில்களுக்காக அல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பாகும் என்றார் அவர்.