Wednesday, January 10, 2007

இன மோதல்களைத் தூண்டிவிடும் நோக்குடன் குண்டுத்...

இன மோதல்களைத் தூண்டிவிடும் நோக்குடன் குண்டுத் தாக்குதல்கள்: பத்திரிகை ஆசிரியர்களிடம் மகிந்த தென்னிலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் குண்டுத் தாக்குதல்கள் இனங்களுக்கிடையே மோதலைத் தூண்டிவிடும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கருதுகின்றது. ஒவ்வொரு காவல்துறைப் பிரிவிலும் விழிப்புக் குழுக்களை அமைத்து இனங்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பணிப்பாளர்களையும் அழைத்துப் பேசிய மகிந்த, ஊடகவியலாளர்கள் இன, மத ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையிலான செய்திகளைத் தவிர்த்து இனங்கள் மற்றும் மதங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும். குரோதங்களை வளர்க்கக்கூடியதாக ஊடகங்களின் செயற்பாடுகள் அமையக் கூடாது. விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான சாத்தியம் உள்ளதா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மகிந்த, பொதுத் தேர்தலுக்கான அவசியம் எதுவும் கிடையாது. ஆரசாங்கம் பாராளுமன்றத்தில் நெருக்கடி எதனையும் எதிர்கொள்ளவில்லை. அப்படியான நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. அவ்வாறு நெருக்கடியான நிலை ஏற்பட்டால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் சிந்திக்கக்கூடும் எனத் தெரிவித்தார். இன நெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக தென்னிலங்கையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நோக்கில் கூட்டப்பட்டிருக்கும் சர்வகட்சி மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த மகிந்த, அரசாங்கத்துக்கு யோசனைகளைச் சமர்ப்பிக்கவே சர்வகட்சி மாநாட்டைக் கூட்டினேன். சர்வகட்சி மாநாட்டின் செயற்பாடுகளுக்கு உதவும் பரிந்துரைகளை செய்வதற்காகவே நிபுணர் குழுவை நியமித்தேன். நிபுணர் குழுவின் அந்த அறிக்கை தொடர்பாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சர்வகட்சி மாநாடு சமர்ப்பிக்கும் அறிக்கையையே எனது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். ஓரிரு மாதங்களில் சர்வகட்சி மாநாட்டின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவக் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன உறுதியளித்திருக்கின்றார். வெகு வரைவில் அரசியல் யோசனைகள் முன்வைக்கப்படும். சகல இன மக்களினதும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அந்தத் தீர்வு யோசனைகள் அமையும் எனத் தெரிவித்தார்.