மன்னார்: குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றவர் சுட்டுக்கொலை நோய் வாய்ப்பட்ட தன் குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற 23 வயதான இளம் தந்தை ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த துயரச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மன்னார் நானாட்டான் பகுதியில் உள்ள அத்திக்குழி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. யோகராஜா நிக்சன் என்று அடையாளம் காணப்பட்ட அவர், தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் சுற்றாடலில் உள்ள கடையில் குழந்தைக்கான பனடோல் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு திரும்பிய போதே இச்சம்பவம் இடம்பெற்றது. கொலை இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து செல்ல முயன்ற நிக்சனின் தந்தையாரை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் சரமாரியாக சுட்டபோது, அவருடன கூடச் சென்ற இன்னொருவர் சூட்டுக்காயங்களுடன் தப்பித்துள்ளார்.





