வன்முறைகள் அதிகரித்த சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி நாளை வருகிறார்
[08 - January - 2007]
இலங்கையில் வன்முறைகள் தீவிரமாகி இந்தியா தலையிட வேண்டுமென்ற வேண்டுகோள்கள் அதிகரித்து வரும் ஒரு சூழ்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுவதற்காகவே பிரணாப் முகர்ஜி இந்த விஜயத்தினை மேற்கொண்டாலும், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இலங்கை நிலைவரம் தொடர்பாக குறிப்பாக, வடக்கு, கிழக்கு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து பிரணாப் முகர்ஜி அறிந்து கொள்வார்.
1987 இல் இந்திய- இலங்கை உடன்படிக்கை மூலம் இணைக்கப்பட்ட வட, கிழக்கினை பிரிப்பதென்ற கொழும்பின் முடிவு பற்றியும் இந்தியா ஆராயும்.
வட, கிழக்கிற்கு அதிகளவான அதிகாரப் பகிர்வு குறித்த யோசனைகளுக்கு வெளிப்படையாக அரசாங்கத்தின் செல்வாக்குள்ள சக்திகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டிற்கு புதுடில்லி ஆதரவு தெரிவித்து வந்தாலும் கூட, இதனால் ஏற்படும் உணர்வுகளை கருத்தில் எடுக்க வேண்டிய நிலையில் புதுடில்லி உள்ளது.
இந்தியாவின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றது.
இதேபோன்று இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மன்மோகன் சிங் சந்தித்ததன் மூலம் புதுடில்லி தனது நிலைப்பாட்டில் முக்கிய மாற்றத்தினை செய்தது.
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் மரணித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் முகர்ஜி மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக அமையக் கூடும்.
Monday, January 08, 2007
வன்முறைகள் அதிகரித்த சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி ..
Monday, January 08, 2007





