புலிகள் சகல ஆவணங்களையும் பெற அரச உயர் அதிகாரிகள் உதவுகின்றனர் [08 - January - 2007] பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு போலியான பெயர் விலாசங்களில் தேசிய அடையாள அட்டை தொடக்கம் கடவுச்சீட்டு வரை விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரச நிறுவனங்களில் உயர் அதிகாரிகளும், வேறு சிலரும் துணை போயுள்ளனரென குற்றம் சாட்டும் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு விசேட பாதுகாப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதோடு அரச உயரதிகாரிகள் தத்தமது நிறுவனங்களை நுணுக்கமாக கண்காணிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; குருநாகலை, கம்பஹா, வத்தளை போன்ற பிரதேசங்களில் முகவரிகளை பதிவு செய்து சிங்கள, முஸ்லிம் பெயர்களில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு போலியான தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அந்தந்த உரிய அரச நிறுவனங்களில் சில உயரதிகாரிகளும், வேறும் பலரும் கிராம சேவகர்களும் துணைபோயுள்ளனர். இது கவலைக்குரிய ஆபத்தான நிலைமையாகும். அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட "வெளியேற்றம்" (டிப்பாச்சர்) சீல் மூலம் புலி உறுப்பினரொருவர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு, மின்சார சபை, துறைமுகம், நீர் வழங்கல் பிரிவு தொடர்பான இரகசிய தகவல்களை விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டு அவற்றை தாக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச நிறுவனங்களில் புலிகளுக்கு இரகசிய தகவல்களை வழங்குகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தென்பகுதியில் புலிகள் குண்டுகளை வெடிக்க வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்த வைக்கும் நோக்கத்திலாகும். இதன் மூலம், சர்வதேச ஆதரவை பெறுவதே நோக்கமாகும். அரச நிறுவனங்கள், பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன. எனவே, பாதுகாப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்புகளை அதிகரிக்க வேண்டும். அனைத்து விடயங்களிலும் பொலிஸார் ஈடுபட முடியாது. 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் என்ற வீதத்திலேயே ஆளனி இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.





