Monday, January 08, 2007

இன்று முதல் பஸ், ரயில்களில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள்

இன்று முதல் பஸ், ரயில்களில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் [08 - January - 2007] நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை முதல் பஸ் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தனியார் பயணிகள் பஸ்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளை அடுத்தே அரசாங்கம் இந்த அவசர தீர்மானங்களை எடுத்துள்ளது. பஸ் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நடைமுறைகளில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அவசர கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையில் நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகிய வண்ண, அமைச்சின் செயலாளர், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் அபேய குணவர்தன, இராணுவ அதிகாரிகள், ரயில் சேவை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ஷ்ரீலங்கா போக்குவரத்து சபை பிரதிநிதிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இக் கூட்டத்தில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளின் போது, பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் பௌஸி கூறினார். போக்குவரத்து சேவைகளில் ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்படுகின்ற போதும், அதை மேலும் பலப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் கூறிய அமைச்சர், இதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்புகளும் பெறப்பட திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; பஸ் சேவைகளின் போது பஸ்கள் புறப்படும் முன்னர் நேர கண்காணிப்பாளர், சாரதி, பஸ் நடத்துநர் ஆகியோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பஸ் புறப்பட முன்னர் பஸ்ஸும் பயணிகளின் பொதிகளும் முற்றாக சோதனையிடப்பட வேண்டும். இதில் பயணிகளின் பொதிகளும் அடங்கும். இதேநேரம், பஸ் பயணத்தின் போது இடை நடுவில் பெரிய பொதிகள் ஏற்றப்படமாட்டாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பார்க்கும் போது என்னவென்று தெரிந்து கொள்ளக் கூடிய பொதிகளுடன் மட்டுமே இடைநடுவில் பயணிகள் பஸ்ஸிற்குள் அனுமதிக்கப்படுவர். இதனால் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பில்லை, ஏனெனில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்துடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள், பொதிகள் ஏதாவது பஸ்ஸிலோ, ரயிலிலோ இருப்பின் அது பற்றி உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு அறியத்தர வேண்டும். இதேபோல், ரயில் பயணங்களின் போதும், ரயில் நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், புறப்படும் போதும் பூரண சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் பாதுகாப்பிற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றார். இதேநேரம், இச் சந்திப்பு தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்; பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்கும் போது அது பூரண சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நேர கண்காணிப்பாளரின் பொறுப்பு. இடைநடுவில் பயணிகளை ஏற்றி இறக்கும் போது, பாதுகாப்புக்கு பஸ் சாரதியும், நடத்துநருமே பொறுப்பு கூற வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு கருதி மேலதிகமாக ஒவ்வொரு பஸ்ஸிலும் இன்னுமொரு நடத்துநரை கடமையில் ஈடுபடுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேநேரம், பெரிய பொதிகளுடன் பயணிகள் இடைநடுவில் பஸ்ஸில் ஏற முடியாது. அவ்வாறு பெரிய பொதிகளுடன் வரும் பயணிகள் பிரதான பஸ் நிலையமொன்றுக்கு வந்தே சோதனையின் பின்னர் பஸ்ஸில் ஏற அனுமதிக்கப்படுவர். பஸ் பயணத்தின் போது சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பின் உடனடியாக பஸ்ஸை நிறுத்தி பயணிகளை முதலில் அதிலிருந்து வெளியேற்ற வேண்டுமென நடத்துநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், பஸ்ஸில் அதிகளவு பயணிகளை ஏற்றக் கூடாதெனவும் நடத்துநர்களும், சாரதிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதேவேளை, சந்தேகத்துக்கிடமானவர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் குறித்து பயணிகள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்துவதெனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.