Sunday, January 07, 2007

தமிழ் மொழிமூல சட்டக்கல்லூரி அனுமதியில் சிறப்பு...

தமிழ் மொழிமூல சட்டக்கல்லூரி அனுமதியில் சிறப்பு விகிதாசாரத்தை அறிமுகப்படுத்துமாறு வேண்டுகோள் இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் போர் சூழ்நிலையாலும், சிறுபான்மை சமூகமென்ற ஒரே காரணத்திற்காகவும் பலவழிகளில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு தமிழ் மொழிமூல சட்டக் கல்லூரி அனுமதியின் போது சிறப்பு விகிதாசாரத்தை உடன் அறிமுகப்படுத்துமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டக் கல்லூரி போட்டிப் பரீட்சைக்கு தோற்றி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளே பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை சட்டக் கல்லூரிக்கு தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து பரீட்சார்த்திகளையும் மாகாண, மாவட்ட ரீதியாக தெரிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளுக்கு சிறப்பான வெட்டுப்புள்ளியையும், சிறப்பு விகிதாசார முறையினையும், சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பில் அறிமுகப்படுத்த வேண்டும். சட்டக் கல்லூரிக்கு வருடமொன்றுக்கு 30 மாணவர்களை உள்ளீர்ப்பதுடன், கொழும்பில் மாத்திரம் இப்போட்டிப் பரீட்சையை நடத்தாது வடக்கு, கிழக்கிலும் இப் பரீட்சையை நடாத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போரினாலும், சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்திற்காகவும் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமானளவில் பாதிக்கப்பட்ட நிலையில் சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பில் நிரந்தரத் தீர்வை உடன் பெற்றுத் தருமாறும் அக்கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் சட்டமா அதிபர் கமலசபேசன், சட்டக் கல்லூரி அதிபர் ரொட்றிகோ, சட்டக் கல்வி பேரவை உறுப்பினர் சட்டத்தரணி நீலகண்டன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டக் கல்லூரி அனுமதியின் போது பாதிக்கப்பட்டதாக கூறும் பரீட்சார்த்திகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன், மனோ கணேசன் எம்.பி., கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோரையும் சந்தித்து சட்டக் கல்லூரி அனுமதியின் போது, தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். ரவூப் ஹக்கீம் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தனுடன் கலந்துரையாடி சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதேவேளை, கடந்த வருடம் சட்டக் கல்லூரி அனுமதியின் போது, தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.