நித்தம்புவவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது: தேடுதலில் 3 சிங்களவர் உட்பட 20 பேர் கைது
கம்பகா மாவட்டத்தில் நித்தம்புவ பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குப் பிறப்பிக்கப்பட்ட காவல்துறை ஊரடங்கு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டது.
வன்முறைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவுமே இரவு நேர ஊடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், அப்பகுதியில் படிப்படியாக நிலைமை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில் குண்டுவெடிப்பையடுத்து நித்தம்புவ பகுதியில் குவிக்கப்பட்ட படையினரும் காவல்துறையினரும் அப்பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது மூன்று சிங்களவர்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கைதான ஏனைய 17 பேரும் தமிழர்களாவர். இப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பனவே படையினரால் சோதனையிடப்பட்டன. இந்தத் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் விரிவான முறையில் மேற்கொண்டு வருகின்றார்கள். குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீதி தொடர்ந்தும் மூடப்பட்டேயுள்ளது.
இப்பகுதியில் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அரசாங்க இரசாயனப் பகுப்பாராய்ச்சியாளர்கள் இன்று காலை இங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.
இத்தாக்குதக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு சுமார் இரண்டு கிலோ எடையுள்ளதாக இருக்க வேண்டும் எனவும், பேரூந்தின் கீழ்ப்பகுதியில் இது பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.
வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பேரூந்தில் பயணம் செய்த ஆறு பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 30 பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிய, கம்பகா, குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பத்துப் பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மோசமாகக் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
நித்தம்புவவிலிருந்து கிரிஉல்லை என்ற இடத்தை நோக்கி பெருமளவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 221 ஆம் இலக்க தனியார் பேரூந்திலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. கலாப்பிட்டிய தம்ரோ நிறுவனத்துக்கு அருகில் பேரூந்து சென்று கொண்டிருந்த போதுதான் குண்டுவெடித்துள்ளது.
பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததையடுத்து பேரூந்து தீப்பற்றி எரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அச்சத்துடன் மக்கள் சிதறியோடிய அதேவேளையில் பெருமளவு காவல்துறையினரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்புக்குக் காரணம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும், பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவும் தெரிவித்திருக்கின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்கள்.
மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையே இது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். மன்னார் படகுத்துறையில் விமானப்படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் முகமாக இத்தாக்குதலை புலிகள் நடத்தியிருக்க வேண்டும் என இராணுவ வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
Friday, January 05, 2007
கொழும்பு அருகே குண்டுவெடிப்பு-
Friday, January 05, 2007





