கடத்தப்பட்ட மாணவனை விடுவிக்கவும்: மகிந்தவிடம் நா.உ. கஜேந்திரன் வேண்டுகோள் கடத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனான அருணகிரிநாதர் நிருபராஜை விடுவிக்குமாறு கோரி சிறிலங்கா அரச தலைவருக்கு யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதிய கடிதம்: செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டம் 05.01.2007 கௌரவ மகிந்தராசபக்ச ஜனாதிபதி இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐயா, பல்கலைக்கழக மாணவனின் விடுதலை தொடர்பாக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தினைச் சேர்ந்த 4 ஆம் வருட மாணவன் அருணகிரிநாதர் நிருபராஜ் அவர்கள், சிவபாலகம் மணியகாரன் லேன், கொக்குவில் கிழக்கு, கொக்குவில் என்ற முகவரியிலுள்ள வீட்டிலிருந்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னய தினங்களில் அப்பகுதிக்குச் சென்ற படையினர் நிரூபராஜ் அவர்கள் தனது பெற்றோருடன் 02.12.2006 வரை குடியிருந்த வீட்டின் உரிமையாளரான "காந்தன்" என்பவருடைய பெயரை குறிப்பிட்டு, அவருடைய 'சிவபாலகம்' என்ற வீடு எங்கே இருக்கின்றது என அப்பகுதியிலுள்ள மக்களிடம் விசாரித்துள்ளனர். கடந்த 02.12.2006 இல் அவர்கள் அப்பகுதியிலுள்ள பிறிதொரு வீட்டிற்கு குடியிருக்கச் சென்றுள்ள போதிலும், முன்பு குடியிருந்த வீடு அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்படாமையினால் இவர்களுடய பாராமரிப்பிலேயே இருந்ததுள்ளது. சம்பவ தினம் அதிகாலை 'சிவபாலகம்' மணியகாரன் லேன், கொக்குவில் கிழக்கு, கொக்குவில், என்ற முகவரியிலுள்ள வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் நின்றதை கண்ட அயலவர்கள் தொலைபேசி மூலம் இவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். பொழுது விடியும்போது அங்கிருந்து சென்ற படையினர் மீண்டும் பகல் 10.30 மணியளவில் அவ்வீட்டின் முன்பாக நின்றதை அயலவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் தாம் புதிதாக குடியிருந்த வீட்டிலிருந்த நிருபராஜ் அவர்கள் மதிய உணவு உண்ட பின்னர் தமது பராமரிப்பிலிருந்த 'சிவபாலகம்', மணியகாரன் லேன், கொக்குவில் கிழக்கு, கொக்குவில், என்ற முகவரியிலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பாத நிலையில் இரவு 9.00 மணியைத் தாண்டிய பின்னர் தொலைபேசியில் பெற்றோர் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது கைத்தொலைபேசி இயங்கவில்லை அதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் அவ் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு அவரைக் காணமுடியவில்லை. அத்தோடு அவர் வீட்டிலிருந்து செல்லும்போது அணிந்திருந்த காலணி அங்கு காணப்பட்டுள்ளதுடன், அவ்வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் கிளறப்பட்டு சோதனையிடப்பட்டும்;, வீட்டின் கதவு பூட்டப்படாத நிலையிலும் காணப்பட்டுள்ளது. இதனைக்கண்டு பதற்றமடைந்த பெற்றோர் அவ்வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த தமது உறவினர் வீட்டில் சென்று விசாரித்தபோது, அன்று மதியத்திற்குப் பின்னர் அவர் தமது வீட்டுக்கு வரவில்லையென உறவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரவு ஊரடங்கு வேளை என்பதனால் தொடர்ந்து தேடமுடியாத நிலையில் வீடு சென்றவர்கள் மறுநாள் காலை அயலவர்களிடம் சென்று விசாரித்தபோது சம்பவதினம் புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் வெள்ளைநிற வான் ஒன்று அவ்வீட்டின் முன்பாக வந்து நின்றதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்திலிருந்து புறப்பட்ட வாகனம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி தகவல்களின்படி அருணகிரிநாதர் நிருபராஜ் அவர்கள் இராணுவத்தினரினாலேயே கடத்தப்பட்டுள்ளார் என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது. கடந்த ஒரு வருடகாலமாக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் போன்றோர் மீது, படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களினால் இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறான அச்சுறுத்தல்களினால் கடந்த வருடம் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் இடம் பெறாமையினால் 5,000-க்கும் அதிகமான மாணவர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டிலாவது தமது கல்விச் செயற்பாடுகளை ஆராம்பிக்க முடியாதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த மாணவர்கள் மத்தியில் இவரின் கடத்தல் சம்பவமானது பெரும் பதற்றத்தினையும், ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட மாணவர் ஓர் அப்பாவி மாணவன் என்பதுடன், கல்வியில் மிகவும் திறமை மிக்கவர். இவர் கடத்தப்பட்டுள்ளதன் மூலம் இவரது கல்வி எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இவ் விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு கடத்தப்பட்ட மாணவனை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன். இப்படிக்கு செ.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் யாழ். மாவட்டம்.





