Friday, January 05, 2007

கொக்குவிலில் இளைஞர் சுட்டுக்கொலை

கொக்குவிலில் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 17:48 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். கொக்குவில் கிழக்கில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொக்குவில் கிழக்கு ஆடியபாதம் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. உந்துருளியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞரை வழிமறித்த துப்பாக்கிதாரிகள் ஓட, ஓட விரட்டி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர் கொக்குவில் கிழக்கு கோவில் வீதியைச் சேர்ந்த நவரத்தினம் மனோராஜ் (வயது 26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர்கள் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இளைஞரின் சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோப்பாய் இராஜ வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோப்பாய் இராஜ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமுற்ற நிலையில் யாழ். போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் கோப்பாய் இராஜ வீதியைச் சேர்ந்தவர் என்.மகேந்திரன் (வயது 26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உந்துருளியில் சென்றவர்களே இந்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது இவ்வாறிருக்க, பருத்தித்துறை திக்கத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி வதிரியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரவியம் சற்குணம் (வயது 28) என்ற இந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். புதினம்.கொம்.