நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் நிறுத்தம்: மன்னார் எண்ணெய் வள ஆய்வில் இந்தியா [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 08:57 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] மன்னார் குடாவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நோர்வே அம்முயற்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளையில், இம் முயற்சியில் தாம் விரைவில் ஈடுபடப்போவதாக இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் காஸ்விதேஷ் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் காவேரி ஆற்றுப்படுக்கையில் மேற்கொண்ட எண்ணெய் ஆராய்ச்சியின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுப் பணியில் இலங்கைக்குத் தாம் உதவவவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது: எமது நிறுவனம் காவேரியில் மேற்கொண்ட எண்ணெய்வள ஆய்வின் அடிப்படையிலேயே இலங்கைக்கு உதவவுள்ளது. காவேரியின் பூமி தரையமைப்பைப் போன்ற அடிப்படையிலேயே மன்னார் வளைகுடாவின் தரையமைப்பு உள்ளதால் இதன்கீழ் எண்ணெய் உள்ளது என இந்தப் பணியில் துணிந்து நாம் இறங்கியிருக்கின்றோம். 40 ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் சோவியத் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் வள ஆராய்ச்சி நவீனரக தொழில்நுட்பம் இன்மையால் வெற்றியளிக்கவில்லை. இந்திய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமாகிய நாம், இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்னெ சொத்துக்களை வாங்கவுள்ளோம். இலங்கையின் கரையோரங்களில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டதன் மூலம் அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எண்ணெய் வளம் கொண்டுள்ள பகுதிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவரும், முகாமைப் பணிப்பாளருமான ஆர்.எஸ்.புத்தோல் தெரிவித்திருக்கின்றார். ஆராய்ச்சி மற்றும் காஸ் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அபிவிருத்திக்கு என தமது ஆராய்ச்சியின் தரவுகளை இலங்கைக்குப் பகிர்வதற்கு நோர்வே ஒத்துழைக்க உறுதியளித்ததன் பேரிலேயே இந்தத் தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தரவுகள் இந்தியாவுக்கு மிகவும் பெறுமதியானவை என "இந்திய பிஸ்னஸ்" ஒன்லைன் செய்தித்தாள் தெரிவித்திருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு முதல் நோர்வே எண்ணெய்வள ஆய்வை மேற்கொண்டுவந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் அதிருப்தி காரணமாகவும், இனவாத அமைப்புக்கள் அதற்கெதிராகத் தெரிவித்துவந்த கருத்துக்கள் காரணமாகவும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் இந்த ஆய்வை தாம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. புதினம்.கொம்.





