சென்னையிலிருந்து பருத்தித்துறை வந்துள்ள உணவுக் கப்பல்
யாழ். குடாநாட்டுக்கான ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 மூடப்பட்டுள்ளதையடுத்து அங்கு உருவாகியிருக்கும் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பெருந்தொகையான உணவுப் பொருட்களைக் கொண்ட இந்தியக் கப்பல் ஒன்று சென்னையிலிருந்து பருத்தித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறையை வந்தடைந்த இந்தக் கப்பலிலிருந்து உணவுப் பொருட்களை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சென்னையிலிருந்து வந்துள்ள இந்த உணவுக் கப்பல் தனியார் வர்த்தகர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்டே இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்திய அரசாங்கத்துக்கு இவ்விடயத்தில் எவ்விதமான சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொங்கலுக்கு முன்னதாக குடாநாட்டில் காணப்படும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கத்துடனேயே இந்தக் கப்பல் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தற்போது காணப்படும் பாரிய உணவுப் பிரச்சினையை இதன் மூலம் ஓரளவுக்கு நீக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் யாழ். அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கான உணவுப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டதாலும், ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பதாலும் யாழில் உருவாகியிருக்கும் உணவுப் பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாட்டை நீக்குவதற்கு இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களைக் கப்பல் மூலமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
யாழ். குடாநாட்டில் காணப்படும் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கக்கூடிய வகையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பருப்பு, மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், நற்சீரகம், உப்பு, புளி, மல்லி, அவல், சர்க்கரை, மஞ்சள், சீனி உட்பட பெருமளவு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளது.
இந்த பொருட்கள் தற்போது கொழும்பு விலையை விட பத்து மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளையில், இவற்றில் சில பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றது.
Friday, January 05, 2007
சென்னையிலிருந்து பருத்தித்துறை வந்துள்ள உணவுக் கப்பல்
Friday, January 05, 2007





