சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரிப்பு இந்தியாவுடன் இணைந்து சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. திருகோணமலையில் சீனக்குடாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களை தவிர்த்து வேறு இடமொன்றில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் யோசனைக்கு இந்தியா உடன்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து திருகோணமலையில் 500 மெகாவார்ட் அனல்மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்திட்டம் குறித்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போதே யோசனை முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய அனல்சக்தி கூட்டுத்தாபனத்தின் ஆய்வுக்குழு திருகோணமலைக்கு வந்து ஆய்வு செய்து மூன்று இடங்களை அடையாளம் கண்டது. இந்த மூன்று இடங்களும் சீனக்குடாவிலேயே உள்ளன. பிரதானமாக மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின் உலை இயந்திரங்களையும், ஏனைய சாதனங்களையும் இந்தோனேசியா உட்பட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு வசதியாகவே சீனக்குடா துறைமுகத்தை அண்மித்த பகுதிகளை ஆய்வுக்குழு தெரிவு செய்திருந்தது. இதனடிப்படையிலேயே இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட இந்தியா தயாராக இருந்தது. ஆனால், சமீபகாலமாக இலங்கை அரசாங்கம் சம்பூரில் இதனை அமைக்கும் திட்டத்தை ஒருதலைப்பட்சமாக முன்வைத்திருப்பதாகவும், சம்பூர் துறைமுகத்திலிருந்து வெகு தொலைவிலிருப்பதாகவும் இந்திய கூட்டுத்தாபனம் தெரிவித்து அதனை முற்றாக நிராகரித்துள்ளது. சம்பூர் திட்டம் அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதாகவும், விடுதலைப்புலிகள் வசமிருந்து அண்மையில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பதால் அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. சம்பூர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தான் படைத்தரப்பால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஜூலை மாதம் வரை சீனக்குடாவில் மின் நிலையத்தை அமைக்கத் தயாராக இருந்த அரசாங்கம் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அத்துடன், சம்பூரிலேயே அனல்மின் உலை அமைக்கப்படுமென ஊடகங்கள் மூலம் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கை மூன்று நிர்வாக அலகுகளாக பிரித்த அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை தனியான நிர்வாக அலகாக அமைத்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை கூடுதலாக அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்குரிய நடவடிக்கைகளில் பிரதானமானதாகவே சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் ஒருதலைப்பட்சமான முடிவை அரசு எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவை இந்தியா முற்றாக நிராகரித்துவிட்டதாகவும், சீனக்குடாவில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றில் அனல் மின் நிலையத்தை அமைப்பதாக இருந்தால் மட்டுமே உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயாராக இருப்பதாகவும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் இருதரப்பும் அனல் மின் உலை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.





