Sunday, January 07, 2007

திருமலை, மட்டக்களப்பு பகுதிகளில் 4 படை முகாம்கள் மீது ..

திருமலை, மட்டக்களப்பு பகுதிகளில் 4 படை முகாம்கள் மீது ஆட்லறி தாக்குதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நான்கு இராணுவ முகாம்கள் மீது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவும் நேற்று சனிக்கிழமை காலையும் ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் கல்லாறு, மகிந்தபுர மற்றும் மாவிலாறு படைமுகாம்கள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேநேரம், மட்டக்களப்பு கஜூவத்தை முகாம்மீது நேற்றுக்காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் நால்வர் படுகாயமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது. வாகரைப் பகுதியிலிருந்தே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் படையினரும் கடுமையான பதில் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், நேற்றுக் காலை வாகரை நோக்கி படையினர் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். குடும்பிமலைப் பகுதியிலிருந்து வாகரைக்கு விடுதலைப்புலிகளின் அணியொன்று வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்தத் தாக்குலை நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வாகரை நோக்கி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெற்று வருவதும் தெரிந்ததே.