வாகரைப் பகுதியில் 9 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு. சிறீலங்கா படையினர் வாகரை வைத்தியசாலையையும் அண்டிய இடங்களையும் நோக்கி மிகப்பாரிய எறிகணைத்தாக்குதல்களை ஆரம்பித்ததையடுத்து 9000 மக்கள் அச்சமடைந்து அவசர அவசரமாக இடம்பெயர்ந்து கஜவத்தை பகுதியை நோக்கி 200 உழவு இயந்திரங்களிலும் மற்றும் பலர் கால்நடையாகவும் ஈருளிகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர். 6000 மக்கள் வாகரையின் வடபுறமாக ஓடிக்கொண்டிருக்கையில் அவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்னொரு தொகுதி மக்கள் மாங்கேணியை நோக்கி படகுகளில் சென்று வெளியேறியுள்ளனர். இன்று காலை மிகப்பாரியளவில் ஆரம்பித்த பொதுமக்கள் மீதான தாக்குதல் பற்றி அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. போரில் பொது மக்கள் இலக்கு வைக்கப்படுதல் அனைத்துலக விதிகளுக்கு முரணானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட்ட அமைப்புகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தன.





