யாழ். குடாநாட்டில் கடந்த 9 நாட்களில் 17பேரை காணவில்லை. Thursday, 11 January 2007 யாழ்.குடாநாட்டில் கடத்தப்படுவோரினது எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்குள் புகுந்து ஆயுதபாணிகளால் கடத்தி செல்லப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஹலோ ட்ரஸ்ட் என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தற்போது பலர் கடத்தி செல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை இரவு வெள்ளை வானில் நாயன்மார்கட்டு, கடுக்காய் வீதிக்குச் சென்ற படையினர், "ஹலோ ட்ரஸ்ட்" கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இரு பிள்ளைகளின் தந்தையாரான சீவரத்தினம் நிரஞ்சன், பூபாலசிங்கம் ரமேஷ்குமார் ஆகியோரைக் கடத்திச் சென்றுள்ளனர். அன்றைய தினம் தாவடிப் பகுதியில் சாந்தி அழகன் என்பவரும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு மாலை உரும்பிராய்க்கு பிரத்தியேக வகுப்பொன்றுக்கு சென்றுவிட்டு யாழ். நாவலர் வீதியிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த உயர்தர மாணவரான காந்தியழகன் சிறிகாந்த் இடைவழியில் காணாமல் போயுள்ளார். அன்றைய தினம் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து நெல்லியடிச்சந்திக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சுப்பிரமணியம் செல்வராஜா காணாமல் போயுள்ளார். கடந்தவாரம் கடத்தப்பட்ட நிரூபராஜ் என்ற யாழ்.பல்கலைக்கழக மாணவன் சித்திரவதைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இராணுவத்தினரும் இராணுவ துணைக்குழுவாக இயங்கும் ஈபிடிபியுமே இவரை கடத்தி சென்று சித்திரவதை செய்ததாகவும் இவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் பல்கலைக்கழக சமூகத்தின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.





