Thursday, January 11, 2007

உடன்படிக்கை 5 வருடம் நிறைவடைய இடமளிக்க வேண்டாம் ..

போர் நிறுத்த உடன்படிக்கை 5 வருடம் நிறைவடைய இடமளிக்க வேண்டாம் -ஜே.வி.பி. Thursday January 11 2007 சட்ட விரோதமான போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசாங்கம் உத்தியோக பூர்வமாக விலகுவதன் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியுமெனவிமல் வீரவன்ச 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட தேசத் துரோக போர் நிறுத்த உடன்படிக்கை 5 ஆவது வருட நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே விடுதலைப் புலிகள் நித்தம்புவ மற்றும் கஹவ கொடகம பகுதிகளில் இரு பஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அனைத்தும் நடக்கிறதாவென பார்வையிட நியமிக்கப்பட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, நோர்வே அனுசரணையாளர்கள் சமாதான செயற்பாடுகளில் இருந்து இன்னும் உத்தியோக பூர்வமாக விலகாத நிலையிலேயே புலிகள் இவ்விரு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகள், தங்களுக்கு இடைக்கால இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த இந்த சட்ட விரோத போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு போதும் உத்தியோக பூர்வமாக விலக மாட்டார்கள். ஏனெனில் புலிகள் தங்களுக்கு கிடைத்த இடைக்கால இராஜதந்திர அந்தஸ்தை, இந்த உடன்படிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் பூரணப்படுத்திக் கொள்ள முடியுமென அவர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்லாது தங்களுக்கு பிரியமான நோர்வே அனுசரணையாளர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதெனில் இந்த உடன்படிக்கை உத்தியோக பூர்வமாக இருக்க வேண்டுமென புலிகள் நம்புகின்றனர். அதற்கமைய, உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக தக்க வைத்துக் கொண்டு, அதன் மூலம் தாங்கள் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்களை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் புலிகள், அதேநேரம் வழமை போல பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். அப்பாவி பொதுமக்களை மொத்தமாக தொடர்ச்சியாக கொலை செய்யுமளவிற்கு தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளை புலிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசாங்கம், புலிகளின் இந்த இரு வழிப் போக்கை சரியாக புரிந்து கொண்டு செயற்படுவதில்லை. அரசாங்கம் புலிகளுக்கு ஏதோவொரு யுத்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. எனினும், இந்த அழுத்தத்தினால் பயங்கரவாதிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகவில்லை. விடுதலைப் புலிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள யுத்த அழுத்தத்திற்கு பயங்கரவாத நடவடிக்கைகளால் மட்டும் முகம் கொடுக்கவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் தங்களுக்கு கிடைத்த இலங்கை அரசுக்கு சமனான இராஜதந்திர அந்தஸ்து, நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழு மேற்கொள்ளும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் போன்ற சகல வழிகளிலும் புலிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்துக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இணைத் தலைமை நாடுகள் மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த உடன்படிக்கையின் காரணமாகவே இலங்கை அரசையும், புலிகளையும் சமமாக மதித்து நிலைப்பாடுகளை வெளியிடுகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கையில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட "புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி"யில் வேறான மற்றும் முறையான ஆட்சி நடப்பதாக உலகுக்கு எடுத்துக் காட்டுவதே புலிகளின் இலக்காகவுள்ளது. அதற்காகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் அண்மையில் "தமிழீழ அடையாள அட்டை" வெளியிடும் நாடகத்தை உலகுக்கு காட்டவென அரங்கேற்றினார். எனவே, இனியாவது நாம் சட்டவிரோத போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் புலிகளுக்கு கிடைத்த இடைக்கால இராஜதந்திர அந்தஸ்தை இல்லாமலாக்க வேண்டும். தனிநாடு என்ற எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும். இந்த உடன்படிக்கை மூலம் இலங்கை அரசுடன் சமமாக ஒப்பிட்டு புலிகள் தொடர்பாக அறிக்கை விடுக்க சர்வதேச சமூகத்திற்கு கொடுத்துள்ள வாய்ப்பு பறிக்கப்பட வேண்டும். நோர்வேயின் சமாதான செயற்பாடுகளை ரத்து செய்ய வேண்டும். இலங்கை அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறி ரத்து செய்வதன் மூலமே இவற்றை செய்ய முடியும். அவர்களில்லாமல் இலங்கை அரசிற்கு எதிராக புலிகள் கொண்டு செல்லும் அரசியல் நடவடிக்கைகளை தோற்கடிக்க வேறு வழியில்லை. தங்களது யுத்த தோல்வியை போக்கிக் கொள்ள புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இது மேலும் தொடரலாம். இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு பாதுகாப்பு படையினருக்கு மட்டும் தனித்து நின்று முகம் கொடுத்து விட முடியாது. பொதுமக்கள் தன்னிச்சையான பாதுகாப்பு அரணாக செயற்பட்டால் மாத்திரமே இந்த நிலைமைக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும். அரசாங்கம் பழைய சமாதான செயற்பாடுகள் மற்றும் புதிய யுத்த நடவடிக்கை ஆகிய இரண்டிற்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதை நாடும், மக்களும் தெளிவாக புரிந்து கொண்டால் மாத்திரமே அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும். புலிகளை உண்மையாக தோற்கடிக்க யுத்தம் மார்க்கமாக தற்போது முன்னெடுக்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுடன் நின்று விடாமல் அரசியல் ரீதியிலும் நாம் மேற்சுட்டிக்காட்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென நாம் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். அதைவிடுத்து யுத்த ரீதியில் மட்டும் விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தினால் முழுமையான வெற்றியை பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, சட்ட விரோத போர் நிறுத்த உடன்படிக்கை 5 வருட பூர்த்தியை நிறைவு செய்ய இடமளிக்கப்படக் கூடாது என்றார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விஷேட கூற்றொன்றை முன்வைத்து பேசும் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு கூறினார்.