ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 அமைச்சுப் பதவிகள் [வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007] சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். இத்தகவலை நேற்று வியாழக்கிழமை தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மிகுதிப் பேருக்கு தேசிய அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பாக நாம் அண்மைய கூட்டங்களில் மகிந்தவுடன் கலந்துரையாடி உள்ளோம். ஆனால் இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் வாரம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்க உள்ளோம். அதன் பின்னர் வேறு சில உறுப்பினர்களும் வழங்குவார்கள் என்று கூறினார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 40 ஆக வைத்திருக்க தீர்மானித்துள்ளோம். இல்லாதுவிடின் அது சிறுபான்மை கட்சி ஆகிவிடும் அப்படி நடந்தால் ஜே.வி.பி எதிர்க்கட்சி ஆகிவிடலாம். நாம் அதில் கவனமாக செயற்படுவோம் என்று தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில், 13 உறுப்பினர்களே அரசுக்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அரசு அவர்களை உள்வாங்கினால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தானாகவே முறிவடைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.





