Tuesday, January 16, 2007

(4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர்

(4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுதியில் திருகோணமலைப் பகுதியிலும் தெற்கில் மாங்கேணிப் பகுதியிலும் படையினர் இருமுனைகளில் நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். என்றுமில்லாதவாறு குறுகிய நேரத்தில் அதிகளவிலான எறிகணைகளை படையினர் வீசியுள்ளனர். மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து வான்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலை கல்லாறு, மட்டக்களப்பு வாழைச்சேனை, மட்டக்களப்பு கரடிக்குளம் முகாம்களில் இருந்து எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரத்தை இலக்குவைத்து உப்பூறல் வழியாக ஒரு நகர்வை படையினர் மேற்கொண்டனர். இதனிடையே ஈச்சிலம்பற்றுப்பகுதிக்கு ஊடாகவும் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். தெற்கே மட்டக்களப்பு மாங்கேணியிலிருந்து பனிச்சங்கேணி நோக்கியும் ஆக்கிரமிப்பு நகர்வு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. அதிக எண்ணிக்கையில் படையினர் குவிக்கப்பட்டு இந்த ஆக்கிரமிப்பு நகர்வு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று மாலை வரை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர். எதிர்த்தாக்குதலில் படையினரின் நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய மோதல்களில் படைத்தரப்பில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இன்று படையினர் நடத்திய தாக்குதலின் போது வாகரைப்பகுதி மக்கள் பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர். வாகரை மக்கள் வாழ்விடங்கள் யாவற்றிலும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்துள்ளன. மிகப்பெரும் மக்கள் அவலம் அங்கு காணப்படுகின்றது. புதினம்.கொம்.