Friday, January 05, 2007

ஆள ஊடுருவும் அணியின் தாக்குதல் 2 வர் பலி 3வர் காயம்

வவுனியாவில் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் இரு தமிழ் அதிகாரிகள் படுகொலை வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். நெடுங்கேணி ஐயனார் ஏற்றப்பகுதியில் சிறிலங்கா அரசின் விவசாயத் திணைக்கள ஊர்தி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. நயினாமடுவுக்கு பழ மரக்கன்றுகளைக் கொண்டு சென்ற போது ஊர்தி மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விவசாயத் திணைக்கள பாடவிதான அதிகாரியான வவுனியா பிரௌன் கம்பனியடியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 60) மற்றும் விவசாய அதிகாரியான வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் (வயது 55) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நெடுங்கேணி விவசாயத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றினர். விவசாயத் திணைக்களத்தின் பணியாளர் குருகுலசிங்கம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஓட்டுனர் சித்திரவேல் ஆகியோர் படுகாயமடைந்தோர் ஆவர். இதனிடையே முல்லைத்தீவு அலம்பில் பகுதி இடம்பெயர்ந்தோர் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமையும் கிபீர் விமானங்கள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. அலம்பில் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு பூந்தாய் கிராமத்தில் ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையினரின் கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. கிபீர் விமானங்களால் 12 குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலின் போது குடியிருப்பில் வாழ்ந்த மக்கள் சிதறி ஓடி பாதுகாப்பை தேடிக்கொண்டதால் இழப்புக்கள் ஏற்படவில்லை. இதே குடியிருப்பின் மீது நேற்று வியாழக்கிழமை கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் 7 பொதுமக்கள் காயமடைந்தனர். இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமம் மீது கடந்த 2 ஆம் நாள் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 8 சிறார்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 16 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.