இலங்கை சமாதான முயற்சிகளுக்கு பாலாவின் மறைவு ஒரு பின்னடைவு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார் சொல்ஹெய்ம்
[uthayan.com]
இலங்கை சமாதான முயற்சிகளில் புலிகளின் மதியுரை ஞர் அன்டன் பாலசிங்கம் கோபுரமாக உயர்ந்து நின்றவர். எனவே, அவரின் மறைவு சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு.
இவ்வாறு பெரும் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார் நோர்வே வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நோர்வே அனு சரணைத் தரப்பின் பொறுப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம்.இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு ஒஸ்லோவில் இருந்தபடி அளித்த பேட்டியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அந்தப் பேட்டியில் பாலசிங்கத்தின் மறைவையொட்டி மேலும் கூறியதாவது:
ஏற்கனவே தடுமாறும் நிலையில் இருக்கும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கு பாலசிங்கத்தின் மறைவு மேலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த வகையில் அமைதி முயற்சிகளில் கோபுரமாக அவர் உயர்ந்து நின்றார். எனவே, அவர் இல்லாமல் அதைத் தொடர்வது மிக கஷ்டமாக இருக்கப் போகிறது. அவரது மறைவு குறித்து நான் ஆழ்ந்த வருத்தப்படுகிறேன்.இலங்கைத் தீவில் பேச்சு மூலமான தீர்வு வாயிலாக மட்டுமே வன்முறைக ளுக்கு முடிவுகட்டலாம் என பாலசிங்கம் திடமாக நம்பினார்.அவர் சமாதானத்தை உருவாக்க விரும்பினார்.
சமஷ்டி முறை மூலம் மட்டுமே தீர்வை எட்டும் ஒரு வழி முறையை 2002 இல் ஒஸ்லோவில் அவர் கண்டுபிடித்தார். மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இலங்கை நிலைமை மோசடைந்திருப்ப தைப் பார்த்து அவர் மிகமிக கவலையுற்றிருந்தார். அதேசமயம் பேச்சு மூலமான தீர்வு இறுதியாக எட்டப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவர் விட்ட இடத்திலிருந்து அம்முயற்சி தொடரப்படவேண்டும் என்பதே அவரின் விருப்பாக இருந்தது.அது எனக்கு தெளிவாகத் தெரியும். நாங்கள் அதை மறந்துவிடக்கூடாது.புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவர் பாலசிங்கம். பேச்சு மூலமான தீர்வில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அதேசமயம் தமிழரின் போராட்டத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.இந்த அமைதி முயற்சிகளில் எனக்கு எந்தச் சமயத்திலும் பொய்யே உரைக்காத நபர்களில் அவரும் ஒருவர்.
எப்போதும் உண்மையை தாம் கண்டபடி அப்படியே உரைப்பவர் அவர். அவர் குறித்து எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவ்வகையில் அவர் மிக உயர்ந்த மனிதர்.கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது தனது மரணம் நீண்ட நாட்களில் இல்லை; வாரங்கள்தான் என்றார் அவர். அப்படியே நடந்தது என்றார் சொல்ஹெய்ம்.
Saturday, December 16, 2006
இலங்கை சமாதான முயற்சிகளில் புலிகளின் மதியுரைஞர்...
Saturday, December 16, 2006





