Saturday, December 16, 2006

புலிகள் அமைப்பில் பெரும் வெற்றிடம் தோன்றும்:

தேசத்தின் குரலின் மறைவினால் புலிகள் அமைப்பில் பெரும் வெற்றிடம் தோன்றும்: ரவூப் ஹக்கீம் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழர் இனப்பிரச்சனையில் அவரது அர்ப்பணிப்பையும், பேச்சு மேசையில் அவருக்கு இருந்த அபரிமிதமான திறமைகளையும் நான் கண்டு வியந்திருக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இடம்பெற்ற ஆறுகட்டப் பேச்சுக்களில், விடுதலைப் புலிகள் குழுவுக்கு அன்ரன் பாலசிங்கம் தலைமை தாங்கியபோது, அரச குழுவில் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார். கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு, விடுதலைப் புலிகள் அமைப்பில் மிகப்பெரிய வெற்றிடமொன்றை உருவாக்கிவிட்டது. தலைமையின் முடிவுதான் இறுதியானது என்ற ஒற்றைக் கொள்கைத்தன்மை கொண்ட விடுதலை அமைப்பில், தானும் சுயமாக முடிவுகளை எடுத்து, எடுத்த முடிவுகளின் வழி உறுதியாக நிற்கும் திறமை கொண்டவர் அவர். செப்ரம்பர் 2002 இல் லண்டனில் அவரைத் தனியாகச் சந்தித்தபோது, முஸ்லிம் தரப்பிற்கும் தனியான பேச்சுக்குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை, அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், இதன் பின்னர்தான் எரிக் சொல்ஹெய்மும் இந்தக் கருத்தை வெளிப்படுத்த அவர் மூலம் இணக்கமான ஒரு சூழல் உருவானது என்றும் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் பல்வேறு நோய்களாலும் பாதிப்படைந்து துன்பங்களை அனுபவித்தாலும், இனப்பிரச்சனை தொடர்பில் உறுதியுடன் செயற்பட்டார். அண்மைக் காலத்தில் அவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்தமை போன்ற விடயங்களை நோக்கும்போது, அரசியல் யதார்த்தத்தை அவர் உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்பதை அவதானிக்கலாம் என்றும் ஹக்கீம் கூறினார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் அன்ரன் பாலசிங்கத்தின் பயணத்தில், இணையற்ற தோழியாக அவருடன் வாழ்ந்த அவரது துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துக் கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.