விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றுவோம்: சரத் பொன்சேகா பாரிய தாக்குதல்களால் சீரழிந்திருக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னரங்க எல்லைப் பகுதிகளை ஏற்கனவே இராணுவம் பிடித்துவிட்டது என கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.கிழக்கிலிருந்து விரைவில் விடுதலைப் புலிகள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் 350 முதல் 400 வரை விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், இராணுவத்தினரின் இழப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. வாகரையில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் 41 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் காட்டுப்பகுதி வழியாக பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்கிறார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பகுதிக்குச் செல்ல ஊடகத்துறையினரோ அல்லது மனிதாபிமான உதவிக் குழுவினரோ அனுமதிக்கப்படவில்லை. எனவே இங்குள்ள உண்மையான நிலவரம் குறித்த தகவல்களை எவரும் பெறமுடியாமல் உள்ளது.





