(2 ஆம் இணைப்பு) விடுதலைப் புலிகளினால் 25 மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலின் மாலுமிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை தத்தளித்துக்கொண்டிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் அவதானிக்கப்பட்டது. அதேவேளை சிறிலங்கா கடற்படையின் கலங்களும் அப்பகுதியில் நடமாடியுள்ளன. அந்தப் பகுதிக்குச் சென்ற கடற்புலிகள், அந்தக் கப்பல் சரக்குக்கப்பல் என்பதையும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் அது இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்ததையும் உறுதிப்படுத்தினர். கப்பலில் சிக்கியிருந்த 25 மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றிக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். எனினும் கப்பலை கரைக்கு கொண்டு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால் கடல் நீரோட்டத்தில் அது கரை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காப்பாற்றப்பட்ட மாலுமிகள் விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஜோர்தானிய சரக்குக்கப்பலான "ஃபார்கா - 3" இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்துள்ளதாக அறியப்படுகின்றது. தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகள் காப்பாற்றி மனிதாபிமானப் பணியைப் புரிந்திருக்கும் நிலையில், சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச பொய்ப் பரப்புரைக்கான ஆயுதமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.





