Saturday, December 23, 2006

வாகரை மருத்துவமனையை நோக்கி மும்முனை எறிகணைத் தாக்குதல்

வாகரை மருத்துவமனையை நோக்கி மும்முனை எறிகணைத் தாக்குதல் வாகரை மருத்துவமனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் இருந்து செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வாகரைக்கு வடக்காக உள்ள திருகோணமலை கல்லாறு சிறிலங்காப் படை முகாமிலிருந்தும் வாகரைக்கு மேற்காக உள்ள கரடிக்குளம் படை முகாமில் இருந்தும் தெற்காக உள்ள வாழைச்சேனை படை முகாமில் இருந்தும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் 8 மணிநேரம் வரை தொடர்ந்து இடம்பெற்றது. வாகரை மருத்துவமனைக்கு அண்மித்ததாகவும் கதிரவெளி, கண்டலடி, பாற்சேனை, வம்மிவெட்டுவான், வெள்ளையடி மடு, ஊரியன் கட்டு ஆகிய கிராமங்களின் மீதும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்துள்ளன. இத்தாக்குதலினால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.