Saturday, December 23, 2006

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது:

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது: இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: கேள்வி: சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு புனேயில் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? பதில்: இது ஒன்றும் புதிதல்ல. வழக்கமாக அளிக்கப்படும் பயிற்சி தான். இராணுவத்தினருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அதனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் நம் நாட்டு இராணுவ பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் இந்திய இராணுவத்தின் பொருளாதாரமும் மேம்படுகிறது. கேள்வி: நாக்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே? பதில்: சுரங்கங்களில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெடிபொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், அங்கு சூழ்நிலை சரியில்லாததால் தற்போது வெடிபொருட்கள் அனுப்பப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கேள்வி: இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன? பதில்: தமிழக முதல்வரின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பினோம். இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியா நேரடியாக தலையிடாது. அதே நேரத்தில் இலங்கை இறையாண்மைக்கு தகுந்தபடியும், அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு தகுந்தபடியும் சரியான தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அங்கு அமைதி நிலவ வேண்டும், தமிழர்கள் அமைதியான முறையில் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஏற்கனவே நோர்வே நாட்டு தூதுவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் என்றார் அவர்.