Wednesday, December 20, 2006

வீரவணக்க நிகழ்வில் பெருவாரியான மக்கள் அஞ்சலி.

விடைபெறுகிறார் "தேசத்தின் குரல்" பாலா அண்ணை: பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீரவணக்கம் தமிழீழ "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் புகழுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரவணக்கம் செலுத்தினர். லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்ட்றா மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு பாலா அண்ணையின் புகழுடல் வைக்கப்பட்டது. உலகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் நாள் முழுமைக்கும் லண்டன் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர். நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்நாட்டிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சபாபதி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர். இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகிறது. தமிழீழத் தாயகத்திலும் மலேசியா உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளிலும் லண்டனில் நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வு அதே நேரத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.