Tuesday, December 19, 2006

அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி உத்தரவு

21 மாணவர்களையும் விடுவிக்குமாறு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி உத்தரவு அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 21 மாணவர்களையும் இரு ஆசிரியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ராம் உத்தரவிட்டுள்ளார் என்று இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து விசாரணைகள் நடைபெறுகிறது என்றும் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு இளந்திரையன் தெரிவித்தார். இந்த சம்பவத்தை "துரதிர்ஸ்டவசமான அத்தியாயம்" என இளந்திரையன் வருத்தம் தெரிவித்துள்ளார். திருகோவில் விநாயகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 15 பெண்கள், 6 ஆண்கள் ஆகிய மொத்தம் 21 மாணவர்களையும் அவர்களது ஆசிரியர் மற்றும் தனியார் துணைப்பாட வகுப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரையும் பிடித்துச் சென்றனர். க.பொ.த. சாதாரண தரம் பயிலும் இந்த மாணவர்கள் துணைப் பாட வகுப்புக்குச் சென்ற இடத்தில் பிடித்துச் செல்லப்பட்டனர். மாணவர்களை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றதாக சிறிலங்கா இராணுவத் தரப்பினர் இன்று காலை குற்றம் சாட்டியிருந்தனர். நன்றி:புதினம்