தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான்
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார்.
பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாக, தமிழீழத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாக, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும்.
அவர் தேசத்திற்காக ஒட்டுமொத்தமாக பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் காலத்தால் மாறாமல் காலத்தால் அழியாமல் என்றென்றும் நினைவில் இருக்கும். ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளில் இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் லண்டனினால் வழி நடத்தப்பட வேண்டும் என்று நினைத்திருந்த காலத்தில் லண்டன் போராட்டத்துடன் நிற்க வேண்டும் என்று "தேசத்தின் குரல்" சிந்தித்தார்.
அன்றைய காலத்திலேயே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை அவரால் அடையாளம் காணமுடிந்தது. தலைவர் அவர்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனால் அவர் தலைவர் அவர்களுடன் இணைந்து கொண்டார். "தேசத்தின் குரல்" அவர்கள் தலைவர் அவர்களுடன் இருந்த காலம் தமிழீழத்தின் பொற்காலம்.
அந்தப் பொற்காலத்தின் சுவடுகள் தமிழீழத்தின் இறுதிவரையில் நிலைத்திருக்கும் என்று தெரிவித்த பொட்டு அம்மான், தமிழீழத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதே "தேசத்தின் குரல்" அவர்களுக்கும் அவரது துணைவியாருக்கும் செலுத்தும் காணிக்கையாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.
Tuesday, December 19, 2006
தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம்
Tuesday, December 19, 2006





