Monday, December 18, 2006

அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள்

அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள் வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கடந்த ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் அழைத்துச் சென்று காண்பித்தார். வாகரை மருத்துவமனை, வம்மிவெட்டுவான் பாடசாலை, பற்சேனை பாடசாலை, கதிரவெளி பாடசாலை, வெருகல் கோயில் ஆகிய இடங்கள் வாகரையில் தங்கியுள்ள அகதிகளுக்கான நலசேவை இடங்கள் இவற்றைப் பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும் என எழிலன் காகேசி மார்யத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் குறிப்புக்களை காகேசி மார்யம், சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்து இவை பாதுகாப்பு வலயங்களாகப் பேணப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்படியிருந்தும் குறிப்பாக இந்தப் பகுதிகளில் இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதல்களில் 89 மக்கள் பலியாகியுள்ளனர். இவை போர்நிறுத்த உடன்பாட்டைக் கடுமையாக மீறுவதாகும் என அந்த அறிக்கை விளக்கியுள்ளது. வாகரையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பொதுமக்களும் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களும் தற்போது வாகரையில் வாழ்ந்து வருகின்றனர். இராணுவம் தனது பயங்கரவாத கொடுந் தாக்குதல்களால் வாகரை மக்களையும் அங்கிருந்து இடம்பெயரத் தூண்டுகிறது. பொதுமக்களை வாகரையிலிருந்து முற்றாக வெளியேற்றுவதே இராணுவத்தின் நோக்கம். போர் தொடர்புடைய காரணங்களுக்காக தங்களது சொந்த இடத்திலிருந்து பொமக்கள் வெளியேற கட்டாயப்படுத்தக்கூடாது என்ற போர்நிறுத்த உடன்பாட்டில் 17.2 ஆவது சரத்தை சிறிலங்கா அரசு மீறி விட்டது என அறிக்கை கூறுகிறது. இராணுவத்தினரின் பகுதிகளுக்குள் செல்ல வாகரை பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மீது பொதுமக்கள் பீதி கொண்டுள்ளனர். ஏனெனில் வாகரை பொதுமக்கள் விடுதலைப் புலிகள் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுவார்கள். இராணுவத்தின் எறிகணை தாக்குதல்களுக்கு அஞ்சி வாழ்ந்த பொதுமக்கள் இப்போது மீண்டும் இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அச்சத்தில் வாழும் இந்த பொதுமக்களை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்புவதுதான் அனைத்துலக சமூகத்தின் பதிலா? என அறிக்கை சாடியுள்ளது. வாகரையிலிருந்து வெளியேற பொதுமக்களாகவே முடிவு செய்தாலும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பாதையை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஏற்படுத்தித் தரவில்லை. பொதுமக்கள் ஆபத்தான கடல், காட்டு வழிகளில் பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. வாகரையில் வாழும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற சி.எழிலனின் கோரிக்கையைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை, அந்த முயற்சிகளை விவரித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தின் கீழுள்ள கிழக்குப் பகுதிகளில் அனைத்துலக அமைப்புக்களின் நிரந்தரச் செயலகங்கள் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது. வாகரை பொதுமக்களின் அவலத்துக்கு அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன? வேறு மாதிரியான ஆபத்துகள் நிறைந்த அரசாங்கப் பகுதிக்கு பொதுமக்களை அனுப்புவதா அல்லது நிரந்தரமான கண்காணிப்புடன் அவர்கள் வாழும் அவர்களது சொந்த பாதுகாப்பானதாக ஆக்குவதா? என அறிக்கை கேள்வியெழுப்பியுள்ளது.